தமிழகத்தில் கரோனா நோயாளிகளுக்கான 30,002 படுக்கைகள் காலியாக உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம், சோளிங்கர், வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் சுகாதாரத் துறை அமைச்சர் ஆய்வு செய்ததுடன், வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் 120 படுக்கை வசதிகள் கொண்ட கோவிட் கேர் சென்டரை நேற்று தொடங்கி வைத்தார்.
இதில், தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி, அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் மா.சுப்பிரமணியன் கூறும்போது, ‘‘தமிழக முதல்வரின் நடவடிக்கை காரணமாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள், ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகள், அதிதீவிர சிகிச்சை படுக்கைகள் எனஅனைத்து வகையான படுக்கைகளில் நேற்று முன் இரவு வரை 30 ஆயிரத்து 2 படுக்கைகள் காலியாக உள்ளன. இதன்மூலம் பெரியஅளவிலான படுக்கைகள் தட்டுப்பாடு குறைந்துள்ளது.
கரோனா 3-வது அலையை எதிர்கொள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்கி அரசு மருத்துவமனைகள் வரை போதிய கட்டமைப்புகள் இருப்பதை உறுதி செய்து வருகிறோம். கரோனா3-வது அலை வந்தாலும், அதை எதிர்கொள்ள தயார் நிலையில் தமிழக அரசு உள்ளது’’ என்றார்.
வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூடுதலாக ஆக்சிஜன் செறிவூட்டிகள் உதவியுடன் 250 படுக்கை வசதிகள் கொண்ட தற்காலிக கரோனா சிகிச்சை மையத்தை சுகாதாரத் துறை அமைச்சர் திறந்து வைத்தார்.
பின்னர், செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும்போது, ‘‘திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தினசரி ஆக்சிஜன் இருப்பு 230 டன்னாக இருந்தது. இது தற்போது 660 டன்னாக அதிகரித்துள்ளது. தற்போதைய தேவை அளவு 500 டன்னாக உள்ளது. செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி நிறுவனம் தொடர்பாக முதல்வர் பேசி வருகிறார். இதில், நல்ல தீர்வு கிடைக்கும்.
மத்திய அரசுடன் இணக்கமான சூழலில் தடுப்பூசி பெற்றுபொதுமக்களுக்கு செலுத்துவதுதான் இப்போதைய குறிக்கோள். தமிழகத்துக்கு ஒரு கோடியே ஒருலட்சம் தடுப்பூசிகள் வரப்பெற்றுள்ளன.
இதில், 93 லட்சத்து 75 ஆயிரம்பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் தடுப்பூசி மையங்கள் அமைக்க கருத்து வரப்பெற்றுள்ளன. 18 முதல் 44 வயதுக்குள் கிராமப்புறங்களில் முகாம் அமைக்கப்பட்டு தடுப்பூசிபோடப்பட்டுள்ளன. நேற்று ஒரேநாளில் 2 லட்சத்து 80 ஆயிரம்பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
தற்போது, 50 ஆயிரம் டோஸ்கோவேக்சின் தடுப்பூசிகள் வரப்பெற்றுள்ளன. தடுப்பூசிகள் வரவர மாவட்டங்களுக்கு பிரித்து வழங்கப்படும். ‘நீட்' தேர்வு தொடர்பான தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து விரைவில் முதல்வர் ஸ்டாலின் தெரிவிப்பார்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago