நடிகை சாந்தினி புகாரால் மன உளைச்சல் : முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் மனைவி போலீஸில் புகார்

By செய்திப்பிரிவு

நடிகை சாந்தினி அளித்த அவதூறு புகாரால் குடும்பத்தினர் மன உளைச்சல் அடைந்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் மனைவி டாக்டர் வசந்தி, ராமநாதபுரம் எஸ்பியிடம் புகார் அளித்தார்.

மலேசிய நாட்டைச் சேர்ந்த துணை நடிகை சாந்தினி, சென்னை பெசன்ட் நகரில் வசிக்கிறார். இவர் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.மணிகண்டன் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, தன்னுடன் 5 ஆண்டுகள் குடும்பம் நடத்திவிட்டு ஏமாற்றிவிட்டதாக, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மே 28-ல் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் அடையாறு அனைத்து மகளிர் போலீஸார் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மற்றும் பரணி ஆகியோர் மீது பாலியல் வன்கொடுமை, கருக்கலைப்பு, கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

தனிப்படை போலீஸார் மணிகண்டன் வசிக்கும் மதுரை அண்ணாநகர் வீடு, சொந்த ஊரான ராமநாதபுரத்துக்கு 2 நாட்களுக்கு முன்பு வந்து தேடினர். விசாரணைக்கு அழைப்பாணை வழங்க போலீஸார் மணிகண்டனைத் தேடி வருவதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில் மணிகண்டனின் மனைவி வசந்தி நேற்று முன்தினம்ராமநாதபுரம் எஸ்பி இ.கார்த்திக்கிடம் புகார் மனு அளித்தார். அந்த மனுவில் நடிகை சாந்தினி தனது கணவர் மணிகண்டன் மீதும், தனது குடும்பத்தினர் மீதும் அவதூறாக புகார் அளித்துள்ளார். இதனால் எங்கள் குடும்பத்தினர் மிகுந்த மன உளைச்சல் அடைந்துள்ளோம். எனவே நடிகை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக் கூறியதாவது: இதுதொடர்பான வழக்கு சென்னையில் பதிவு செய்யப்பட்டுள்ளதால், மனுவை சென்னை காவல் ஆணையருக்கு அனுப்பியுள்ளோம் என்றார்.

இதற்கிடையே, கட்டாய கருக்கலைப்பு செய்தது உண்மையா? என சாந்தினி குறிப்பிட்ட மருத்துவமனை மருத்துவரிடம் போலீஸார் நேற்று நேரில் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். மருத்துவர் அளித்துள்ள பதிலின் அடிப்படையில் அடுத்தக்கட்ட விசாரணையை தொடங்கியிருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்