திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளியை அடுத்த வெள்ளிரவெளிகிராமத்தைச் சேர்ந்த தெய்வராஜ்(42), கரோனாவால் கடந்த9-ம் தேதி உயிரிழந்தார். இவரதுமனைவி சாந்தி(35) தொற்றுக்குஉள்ளாகி 16-ம் தேதி உயிரிழந்தார். தெய்வராஜின் மூத்த சகோதரர்கள் தங்கராஜ் (52), ராஜா (50) ஊத்துக்குளி அரசுமருத்துவமனையில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 19-ம் தேதியும், தெய்வராஜின் மற்றொரு அண்ணன் சவுந்தரராஜன் (45) திருப்பூர் அரசு மருத்துவமனையில் 20-ம் தேதியும் உயிரிழந்தனர்.
மகன்கள் உயிரிழந்த விவரத்தை அவர்களது தாயார் பாப்பாளுக்கு (70) உறவினர்கள் தெரிவிக்கவில்லை. கடந்த 26-ம் தேதி தன்னைக் காண மகன்களும், மருமகளும் வராதது குறித்து உறவினர்களிடம் விசாரித்தபோது உண்மை தெரியவந்தது. அதிர்ச்சியில் உறைந்த பாப்பாள், கடந்த 26-ம் தேதி நள்ளிரவு உயிரிழந்தார். இந்நிலையில், அதே கிராமத்தைச்சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி (40) மற்றும்செந்தில்குமார்(38) ஆகியோர் உயிரிழந்தனர். இரு குடும்பங்களைச் சேர்ந்த 8 பேர் உயிரிழந்ததால் சுகாதாரப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
சுகாதாரத் துறையினர் கூறும்போது ‘‘மே மாதத்தில் மட்டும் வெள்ளிரவெளி பகுதியில் 57 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். 13பேர் உயிரிழந்துள்ளனர். கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட பகுதிகளை மூங்கில் தடுப்புகள் கொண்டு அடைத்தாலும், அதை உடைத்துக் கொண்டுசிலர் உள்ளே செல்கின்றனர்.இதுபோன்ற அத்துமீறல்களால்தான் தொற்றின் தீவிரம் குறையவில்லை’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago