ஸ்டெர்லைட் போராட்ட வழக்குகளை ரத்து செய்ததுபோல - ஹைட்ரோ கார்பன் திட்ட போராட்ட வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் : நெடுவாசல் போராட்டக் குழு வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைபோராட்ட வழக்குகளை ரத்து செய்திருப்பதைப் போல, நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு போராட்டக் குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில், முப்போகமும் விளையும் பகுதிகளில் ஒன்றான நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்காக தனியார் நிறுவனத்துக்கு கடந்த 2017-ல்மத்திய அரசு ஒப்பந்தம் வழங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசலில் 200 நாட்களுக்கும் மேலாக தொடர் மக்கள் போராட்டம் நடைபெற்றது. இதில், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், மாணவர்கள், விவசாயிகள் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர். இதேபோல, வடகாடு, நல்லாண்டார்கொல்லை போன்ற இடங்களிலும் தொடர் போராட்டம் நடத்தப்பட்டது.

மேலும், இத்திட்டத்தை ரத்துசெய்யக் கோரி வடகாடு, கீரமங்கலம், புதுக்கோட்டை, ஆலங்குடி போன்ற இடங்களில் சாலை மறியல், ஆர்ப்பாட்டங்கள் உள்ளிட்டவையும் நடத்தப்பட்டன. இத்தகைய போராட்டங்களில் ஈடுபட்ட கட்சியினர், விவசாயிகள், மாணவர் சங்கத்தினர் என 75 பேர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், கடந்த 2018-ல்தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி நடத்தப்பட்ட போராட்டம் குறித்த வழக்குகளில், குறிப்பிட்ட வழக்குகளைத் தவிர ஏனைய வழக்குகளை தமிழக அரசு தற்போது ரத்து செய்துள்ளது. இதேபோன்று, நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராடியவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் என நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு போராட்டக் குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தியோர் மீதான வழக்குகளையும் ரத்து செய்வதற்கு, இம்மாவட்டத்தைச் சேர்ந்த மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, அப்போதைய போராட்டங்களில் பங்கேற்ற தற்போதைய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்