நெய்வேலி மற்றும் சென்னை அரசு மருத்துவமனை உள்ளிட்ட நாட்டின் 9 மருத்துவமனைகளில் மணிக்கு 30 நியூட்டன் கன மீட்டர் மருத்துவ ஆக்சிஜன் தயாரிக்கும் மையங்களை அமைக்க, என்எல்சி இந்தியா நிறுவனம் ஒப்பந்தப் புள்ளிகளை அறிவித்துள்ளது.
மருத்துவ ஆக்சிஜன் தேவை நாட்டின் பல பகுதிகளில் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, என்எல்சி இந்தியா நிறுவனம், தனது மின் திட்டங்களை செயல்படுத்திவரும் தமிழகம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், ஒடிசா போன்ற மாநிலங்களில், சமூக பொறுப்புணர்வுத் திட்டத்தின்கீழ் ஆக்சிஜன் தயாரிக்கும் ஆலைகளை அமைக்க மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி வழிகாட்டுதலின்படி திட்டமிட்டுள்ளது.
அதன்படி மணிக்கு 30 நியூட்டன் கனமீட்டர் (சுமார் 30 ஆயிரம் லிட்டர்) மருத்துவ ஆக்சிஜன் தயாரிக்கும் 9 ஆலைகளையும், நிமிடத்துக்கு 10 லிட்டர் ஆக்சிஜனை செறிவூட்டி அனுப்பும் 500 கருவிகளையும் வாங்க ஒப்பந்தப் புள்ளிகளை அறிவித்துள்ளது.
இவற்றில், நெய்வேலி என்எல்சி இந்தியா மருத்துவமனையில் தலா ரூ.25 லட்சம் முதல் ரூ.30 லட்சம் மதிப்புள்ள மணிக்கு 12 நியூட்டன் கன மீட்டர் அளவு ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் இரு ஆலைகள் நிறுவப்பட உள்ளன.
சென்னையில் உள்ள 3 அரசு மருத்துவமனைகளில் தலா ரூ.65 லட்சம் முதல் ரூ.70 லட்சம் மதிப்பிலான, மணிக்கு 30 நியூட்டன் கனமீட்டர் ஆக்சிஜன் தயாரிக்கும் 3 ஆலைகள் நிறுவப்பட உள்ளன. சென்னையில் தமிழக அரசு குறிப்பிட்டுச் சொல்லும் 3 அரசு பொது மருத்துவமனைகளில் இந்த ஆலைகள் நிறுவப்பட உள்ளன.
இத்துடன் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் திட்டங்கள் நடைபெற்று வரும் ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களிலும் இந்நிறுவனம் தலா 3 ஆக்சிஜன் ஆலைகளை அமைக்க உள்ளது.
இதற்கான நிதி ஆதாரங்கள், 2021-22ம் ஆண்டில் சமூகப் பொறுப்புணர்வு பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொகையில் இருந்து வழங்கப்படும் என என்எல்சி இந்தியா நிறுவனத் தலைவர் ராக்கேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago