புதிய பள்ளிக் கட்டிடம் கோரி - முதல்வருக்கு 7 வயது பள்ளி மாணவி கடிதம் : பொன்னேரி அருகே பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ஆய்வு

By செய்திப்பிரிவு

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியை சேர்ந்தவர் வழக்கறிஞர் பாஸ்கரன். இவரது மகள் அதிகை முத்தரசி (7), பொன்னேரி சிவன் கோயில் அருகே உள்ள மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், பள்ளி கட்டிடத்தை சீரமைக்க கோரியும், ஆக்கிரமிப்புக்குள்ளான பள்ளி மாணவர்கள் விளையாட பயன்படுத்திய அரசு புறம்போக்கு நிலத்தை மீட்கக்கோரியும் கடந்த 2019-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிகை முத்தரசி பொதுநல வழக்குத் தொடர்ந்தார்.

அந்த வழக்கின் இறுதி விசாரணை கடந்த ஆண்டு மார்ச் மாதம்நடந்தது. அப்போது, ஓர் ஆண்டுக்குள் புதிய பள்ளி கட்டிடம் கட்டித்தர வேண்டும். ஆக்கிரமிப்புக்குள்ளான புறம்போக்கு நிலத்தை மீட்டு விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது

இந்நிலையில், ஓராண்டாகியும் உயர் நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்படவில்லை. ஆகவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த 7-ம் தேதி அதிகை முத்தரசி கடிதம் எழுதினார்.

அதன் விளைவாக நேற்றுபொன்னேரிக்கு வந்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாணவி அதிகை முத்தரசி, அவரது தந்தை பாஸ்கரன் மற்றும் பொதுமக்களை சந்தித்து, அவர்களின் கருத்துகளை கேட்டறிந்தார்; முதல்வருக்கு கடிதம் எழுதிய மாணவியை பாராட்டி, அவருக்கு புத்தகம் பரிசளித்தார். தொடர்ந்து, பள்ளி வளாகத்தை சுற்றி பார்த்து, ஆய்வு மேற்கொண்டார்.

அந்த ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் தெரிவித்ததாவது:

பொன்னேரியில் உள்ள மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் ரூ.17.32 லட்சம் மதிப்பில் புதிய பள்ளிக்கட்டிடம் கட்ட சமீபத்தில்தான் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஆகவே,புதிய பள்ளிக் கட்டிடம் அமைக்கும்பணி உடனடியாக தொடங்கப்படும்.

தமிழகத்தில் பள்ளிக்கல்வி துறை சார்ந்த இடங்களில் ஆக்கிரமிப்பு இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

திமுக தேர்தல் அறிக்கையில் உள்ள பள்ளிக்கல்வித் துறை சார்ந்துள்ள 19 வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும். கோடைக்கால விடுமுறையில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதியம்வழங்குவது குறித்து அதிகாரிகளிடம் ஆலோசித்து நல்ல முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, தமிழகஆரம்ப பள்ளிக்கல்வி இயக்குநர் முத்துபழனிசாமி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி எம்எல்ஏக்களான டி.ஜெ.கோவிந்தராஜன், துரை.சந்திரசேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்