தமிழகம், ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், இமாச்சல் பிரதேசம், அஸ்ஸாம் ஆகிய 5 மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என 2015 மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. 2018-ல் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்குஇடம் தேர்வு செய்து மதுரையில்அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, 27.1.2019 அன்றுபிரதமர் நரேந்திர மோடி மதுரைவந்து எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியதுடன், 45 மாதங்களில் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவித்திருந்தார். அடிக்கல் நாட்டி 2 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இன்னும் கட்டுமானப் பணிகள் தொடங்கவில்லை. 2015-ம் ஆண்டுஅறிவித்தபடி கட்டுமானப் பணிகளைத் தொடங்கியிருந்தால் இந்நேரம் கரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க தென் மாவட்ட மக்களுக்குப் பெரும் உதவியாக இருந்திருக்கும்.
இந்நிலையில், தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டிய ராஜா,மதுரை எய்ம்ஸ் கடன் ஒப்பந்தம், கட்டுமானப் பணிகள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்குப் பதிலளித்த மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம், மதுரை எய்ம்ஸ் கடன் ஒப்பந்தமானது 26.3.21 அன்றுஇந்திய மற்றும் ஜப்பான் அரசுகள் இடையே கையெழுத்தானது என்றும் கடன் தொகை மதிப்பு 22.788 பில்லியன் ஜப்பானிஷ் யென் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் 1,536.91 கோடிகள் ஆகும்.
மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த திட்ட மதிப்பீடு ரூ.1,264 கோடி. திட்ட மதிப்பீடு உயரும் வாய்ப்பு உள்ளது என்றும், இந்ததிட்ட மதிப்பீடு உயர்வு அரசின் பரிசீலனையில் உள்ளது என்றும் டெண்டர் நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
இது குறித்து பாண்டிய ராஜா கூறும்போது, "கடன் ஒப்பந்தம்கையெழுத்தாகியுள்ளது. டெண்டர் பணிகளை முடித்து கட்டுமான நிறுவனத்தை முடிவு செய்து பணிகளை உடனே தொடங்க வேண்டும். 750படுக்கை வசதியுடன் கூடிய எய்ம்ஸில் 100 எம்பிபிஎஸ் இடங்களும் 60 செவிலியர் இடங்களும் வர இருப்பதால் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தற்காலிக கட்டிடங்களைத் தேர்வு செய்து மாணவர் சேர்க்கைதொடங்க வேண்டும்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago