சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததைக் கண்டித்த மனைவியை கொலை செய்த கணவருக்கு புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தது.
புதுக்கோட்டை மாவட்டம் புத்தாம்பூர் அருகே உள்ள தேனிப்பட்டியைச் சேர்ந்தவர் முருகேசன்(52). இவருக்கு 3 மனைவிகள் மற்றும் 11 மகன், மகள்கள். கடந்த 2019-ல் முருகேசன் தனது 17 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதையறிந்த முருகேசனின் 2-வது மனைவி பானுமதி(50) அவரைக் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முருகேசன், மேய்ச்சலுக்காக ஆடுகளை ஓட்டிச் சென்றிருந்த பானுமதியை யூக்கலிப்டஸ் காட்டில் கல்லால் தாக்கி கொலை செய்தார்.
புதுக்கோட்டை கணேஷ் நகர் காவல் நிலையத்தில் முருகேசன் மீது கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம் போன்ற பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், நீதிபதி ஆர்.சத்யா நேற்று தீர்ப்பளித்தார்.
அதில், மனைவியை கொலை செய்த குற்றத்துக்கு தூக்குத் தண்டனை, ரூ.1 லட்சம் அபராதம், திருத்தப்பட்ட போக்ஸோ சட்டம் 2019-ன்கீழ் ஆயுள் தண்டனை, ரூ.1 லட்சம் அபராதம் மற்றும் போக்ஸோ சட்டத்தின் மற்றொரு பிரிவின்கீழ் 7 ஆண்டு சிறை தண்டனை, ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், கொலை மிரட்டல் விடுத்ததற்காக 2 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இவ்வழக்கில், அரசு வழக்கறிஞராக அங்கவி ஆஜரானார். தூக்கு தண்டனை தீர்ப்பு எழுதுவதற்கு பயன்படுத்தப்பட்ட பேனாவை நீதிபதி சத்யா உடைத்து தூக்கி எறிந்தார்.
இவ்வழக்கை நேர்த்தியாக புலன் விசாரணை செய்து, குற்றம் சாட்டப்பட்டவருக்கு கடுமையான தண்டனை கிடைக்கச் செய்த போலீஸாரை எஸ்பி பாலாஜி சரவணன் பாராட்டினார்.
6 மாதங்களில் 3 பேருக்கு தூக்கு
கடந்த 6 மாதங்களில் பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட 3 பேருக்கு புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago