தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களிடம் தேர்தல் அனுபவங்கள் குறித்து கட்சித் தலைவர் கமல்ஹாசன் கேட்டறிந்து வருகிறார். இதையடுத்து, முறையாக பணியாற்றாத நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் கடந்த 6-ம் தேதி நடைபெற்றது. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம்கட்சி இத்தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. மக்கள் நீதி மய்யம் சார்பில் 135 பேர் போட்டியிட்டனர்.
இந்த நிலையில், மக்கள் நீதிமய்யம் சார்பில் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களிடம், தேர்தல்களத்தில் எதிர்கொண்ட அனுபவங்களை கட்சித் தலைவர் கமல்ஹாசன் கேட்டறிந்து வருகிறார்.
இதுகுறித்து கட்சி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
ஒரு சிலரிடம் அதிருப்தி
சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்ட சிநேகன், ப்ரியா, பொன்ராஜ், சந்தோஷ் பாபு உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்களை கமல்ஹாசன் கடந்த வாரம் நேரில் சந்தித்து, அவர்களது தேர்தல் அனுபவங்களை கேட்டறிந்தார். அப்போது, முறையாக பணியாற்றவில்லை என ஒரு சிலரிடம் கமல் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார்.இதன் தொடர்ச்சியாக, 27-ம்தேதி (இன்று) முதல் 4 நாட்களுக்கு மற்ற அனைத்து வேட்பாளர்களையும் ஆன்லைனில் சந்தித்து தேர்தல் அனுபவங்களை கேட்டறிய உள்ளார்.
இந்த சந்திப்பின்போது, அவர்களது தேர்தல் அனுபவம், கட்சியினர் எந்த அளவுக்கு ஒத்துழைப்பு கொடுத்தனர், களப் பணியின்போது எதிர்கொண்ட சவால்கள், தேர்தலின்போது பணியாற்றாத நிர்வாகிகள் யாராவது உள்ளனரா, சிறப்பாக பணியாற்றியவர்களின் விவரங்கள் உள்ளிட்ட பல தகவல்களை கமல்ஹாசன் கேட்டறிய உள்ளார்.
தேர்தல் முடிவு வெளியான பிறகு, பணியாற்றாத நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், பணியாற்றியவர்களை அழைத்து பாராட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில்தான் வேட்பாளர்கள் உடனான சந்திப்புகள் நடந்து வருகின்றன. இத்தகையசந்திப்புகள் மூலம், களத்தில் நிலவும் பின்னடைவுகளை சரிசெய்து கட்சியை மேலும் பலப்படுத்த முடியும் என்று கமல்ஹாசன் கருதுகிறார். இவ்வாறு அவர்கள் கூறினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago