நெடுஞ்சாலைகளில் இரவு நேரங்களில் பழுது அல்லது ஓய்வுக்காக சாலையோரம் ஏதேனும் வாகனம் நிறுத்தப்பட்டிருந்தால், அவை நிற்பது தெரியாமல் பின்னால் வரும் வாகனங்கள் மோதி அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன. இதை தவிர்க்க, வாகனங்களின் முகப்பு விளக்கு வெளிச்சம் பட்டு, ஒளியைப் பிரதிபலிக்கும் ஸ்டிக்கரை ஒட்ட வேண்டும் என்ற மோட்டார் வாகன விதிமுறை ஏற்படுத்தப்பட்டது.
ஆனால், சில வாகனங்களில் தரமான ஒளி பிரதிபலிப்பான் ஸ்டிக்கர்கள் ஒட்டப்படாததால் அவை நாளடைவில் மங்கி ஒளியைப் பிரதிபலிக்கும் தன்மையை இழந்துவிடுகின்றன. இதுவும், விபத்து ஏற்பட காரணமாகிறது. எனவே, ஒளி பிரதிபலிப்பான் ஸ்டிக்கர் ஒட்டுவது குறித்து மாநில போக்குவரத்து ஆணையரகம் 2019 ஜூலையில் புதிய உத்தரவு பிறப்பித்தது.
அதன்படி பேருந்து, கார், லாரி, ஆட்டோ உள்ளிட்ட அனைத்துபொது போக்குவரத்து வாகனங்ளுக்கும் அரசு அங்கீகரித்துள்ள ‘3 எம் இந்தியா’, ‘ஏவ்ரி டென்னிசன் (இந்தியா)’ ஆகிய நிறுவனங்களிடம் இருந்து மட்டுமே ஸ்டிக்கரை வாங்கி ஒட்ட வேண்டும். அவ்வாறு ஒட்டினால்தான் வாகனதகுதிச் சான்று (எஃப்.சி) வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதை எதிர்த்து தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த உயர்நீதிமன்றம், கடந்த 31-ம் தேதி அம்மனுவை தள்ளுபடி செய்ததுடன், வாகன தகுதிச் சான்றை புதுப்பிக்கும்போது அரசு அங்கீகரித்துள்ள நிறுவனங்களின் ஸ்டிக்கரை ஒட்டுவது கட்டாயமாகும் என உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக போக்குவரத்து அலுவலர்கள் கூறும்போது, “புதிய விதிமுறைப்படி வாகனங்களின் முன்பகுதியில் வெள்ளை நிறத்திலும், பின்பகுதியில் சிவப்பு நிறத்திலும், பக்கவாட்டுப் பகுதிகளில் மஞ்சள் நிறத்திலும் ஒளி பிரதிபலிப்பான் ஸ்டிக்கர்களை ஒட்ட வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடம் ஸ்டிக்கர் வாங்கி ஒட்டும்போதே, புகைப்படம் எடுத்து பிரத்யேக செயலியில் பதிவேற்றம் செய்து உரிமையாளருக்கு சான்று வழங்குகின்றனர்.
அந்த சான்றில், ஹாலோகிராம், கியூ.ஆர்.கோடு ஆகியவை இருக்கும். அதை www.vahansafety.orgஎன்ற முகவரியில் சரிபார்த்தே தகுதிச் சான்று (எஃப்.சி.) வழங்குகிறோம். வேறு ஸ்டிக்கர் இருந்தால் சான்று வழங்கப்படாது என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago