நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலாப் பயணிகள் சென்று வர தமிழக அரசு தடை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, உதகையில் வணிகர்கள், டாக்ஸி ஓட்டுநர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
சுற்றுலாத் தலங்களுக்கு பொதுமக்கள் சுற்றுலா செல்ல தமிழக அரசு தடை விதித்துள்ளது. சுற்றுலாத் தலங்களை மூடுவதால், நீலகிரி மாவட்டம் உதகையில் சுற்றுலாப் பயணிகளை நம்பி கடை வைத்திருக்கும் சிறு வியாபாரிகள் முதல் சுற்றுலாவை நம்பி உள்ளவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாககூறி உதகை சேரிங்கிராஸ் பகுதியில், 500-க்கும் மேற்பட்ட வணிகர்கள், டாக்ஸி ஓட்டுநர்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது: கடந்த ஆண்டும் கரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டது. சுற்றுலாத் தலங்களுக்குசெல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு மீண்டும் தடை விதித்திருப்பது, எங்களை வேதனையடையச் செய்துள்ளது. சுற்றுலாப் பயணிகளை நம்பி, வியாபாரம் செய்ய பொருட்களைக் கொள்முதல் செய்துள்ளோம். சாக்லேட் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள வியாபாரிகளுக்கு லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்படும். எனவே, நீலகிரி மாவட்ட சுற்றுலாத் தலங்களில் 50 சதவீதமாவது சுற்றுலாப் பயணிகளை அனுமதித்து, எங்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற வேண்டும்” என்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன், சார்-ஆட்சியர் மோனிகா ராணா, உதகை வட்டாட்சியர் குப்புராஜ், உதகை நகர டிஎஸ்பி மகேஸ்வரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வியாபாரிகளின் கோரிக்கை குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும், அரசு அறிவுறுத்தல்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், வியாபாரிகளின் பிரதிநிதிகள் சிலரை, மாவட்ட ஆட்சியரை சந்திக்க அழைத்துச் சென்றனர். இதனால் மறியல் கைவிடப்பட்டது. இந்நிலையில், சுற்றுலாப் பயணிகளுக்கான தடையை நீக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார், அதிகாரிகள் சமாதானம் செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago