பட்டாசுக் கடையில் தீ விபத்து - காட்பாடி அருகே சிறுவர்கள் உட்பட 3 பேர் உயிரிழப்பு :

By செய்திப்பிரிவு

காட்பாடி அருகே பட்டாசு கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிறுவர்கள் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த லத்தேரி கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன் (55). இவர், லத்தேரி பேருந்து நிறுத்தம் அருகே கடந்த 13 ஆண்டுகளாக பட்டாசுக் கடை நடத்தி வந்தார். இந்நிலையில், நேற்று காலை 9.30 மணிக்கு மோகன் தனது பட்டாசு கடையை திறந்து வியாபாரத்தில் ஈடுபட்டார்.

பட்டாசு வெடித்ததால் தீ

காலை 10 மணியளவில் அவரது மகள் வழி பேரன்கள் தேஜஸ் (8), தனுஜ்மோகன் (6) ஆகியோர் தாத்தாவை பார்க்க பட்டாசுக்கடைக்கு வந்தனர். பேரன்களுடன் மோகன் கடையில் பேசிக்கொண்டிருந்தார். காலை 11 மணியளவில் பட்டாசு வாங்க வாடிக்கையாளர் ஒருவர் கடைக்கு வந்தார்.

பட்டாசுகளை வாங்கிய அந்த வாடிக்கையாளர் குறிப்பிட்ட ஒரு ரகத்தை எப்படி வெடிப்பது என மோகனிடம் செயல்முறை விளக்கம் கேட்டதாக கூறப்படுகிறது. அந்த பட்டாசை மோகன் கடைக்கு முன்பாக வைத்து அதை வெடிக்கச்செய்தார். அப்போது, அதிலிருந்து கிளம்பிய நெருப்பு பொறி கடைக்குள் விழுந்து கடையில் தீப்பற்றியது.

இதையடுத்து பட்டாசு கடையில் இருந்த பட்டாசுகள் வெடித்து அங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கடையின் உள்ளே இருந்த பேரன்களை காப்பாற்ற கடைக்குள் ஓடிய மோகனும் தீ விபத்தில் சிக்கினார். கண்ணிமைக்கும் நேரத்தில் நடைபெற்ற இச்சம்பவத்தால் கடை முழுவதும் தீ பரவியது. இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் அலறியடித்தபடி ஓடிவந்து தண்ணீரை ஊற்றினர்.

ஆனால், கடையில் பல ஆயிரம் ரூபாய் மதிப்பில் இருந்த பட்டாசுகள் ஒவ்வொன்றாக வெடித்து பெரும் தீ விபத்து ஏற்பட்டு, அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக மாறியது. கடைக்குள்ளேயே சிக்கிய மோகன், தேஜஸ், தனுஜ்மோகன் ஆகியோர் அலறும் சத்தம் அங்கிருந்தோர்களை கதி கலங்கச்செய்தது.

ஒரு மணி நேரம் போராட்டம்

குடியாத்தம் மற்றும் காட்பாடி தீயணைப்பு வீரர்கள், போலீஸார் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டுவர முயன்றனர். சுமார் 1 மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். இந்த தீ விபத்தில் பட்டாசு கடையின் உரிமையாளர் மோகன் அவரது பேரன்களான தேஜஸ், தனுஜ்மோகன் ஆகியோர் தீயில் கருகி உயிரிழந்தனர்.

3 பேரின் உடல்களும் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வேலூர் சரக டிஐஜி காமினி, வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன், குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் ஷேக்மன்சூர், சட்டப்பேரவை உறுப்பினர்கள் நந்தகுமார் (அணைக்கட்டு) லோகநாதன் (கே.வி.குப்பம்) மற்றும் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து மீட்புப்பணிகளை துரிதப்படுத்தினர்.

லத்தேரி பட்டாசு கடையில் ஏற்பட்ட கோர தீ விபத்தால் சுற்றுவட்டாரத்தில் இருந்த 3 கடைகளில் தீ பரவி அங்குள்ள பொருட்களும் சேதமடைந்தன. அதேபோல, லத்தேரி பேருந்து நிறுத்தம் அருகே நிறுத்தப்பட்டிருந்த 5 இரு சக்கர வாகனங்கள், மிதிவண்டிகள் என சில பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. லத்தேரி போலீஸார் விசாரிக்கின்றனர்.

மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் கூறும்போது, ‘‘மக்களின் கோரிக்கையை ஏற்று லத்தேரி அல்லது கே.வி.குப்பத்தில் தீயணைப்பு நிலையம் கொண்டுவர அரசுக்கு பரிந்துரைக்கப்படும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்