பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு கரோனா : பல்லடம் அதிமுக, காரைக்கால் காங். வேட்பாளர்களுக்கும் தொற்று

அரவக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை, பல்லடம் தொகுதி அதிமுக வேட்பாளர்எம்.எஸ்.எம்.ஆனந்தன் மற்றும்காரைக்கால் மாவட்டம் நெடுங்காடுதொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாரிமுத்து ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

பாஜக மாநில துணைத் தலைவரான கே.அண்ணாமலை, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டார். தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், பிரச்சாரம் முடிந்து ஏப்.6-ம்தேதி வாக்களித்துவிட்டு கோவையில் தங்கியிருந்தார்.

இந்நிலையில், கரோனா தொற்று அறிகுறி காரணமாக நேற்று முன்தினம் கோவையில் கரோனா பரிசோதனை செய்து கொண்டார். இதில், அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கிடையே, கே.அண்ணாமலை நேற்று அவரது ட்விட்டர் பக்கத்தில், “கரோனா பரிசோதனை செய்துகொண்டதில் எனக்கு தொற்று உறுதியானதால், நான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். அதனால், அண்மையில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் ஏதேனும் அறிகுறி தென்பட்டால் கரோனாபரிசோதனை செய்து கொள்ளுங்கள்” என பதிவிட்டுள்ளார்.

இதேபோல, காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு (தனி) சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான ஏ.மாரிமுத்துவுக்கு நேற்று கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து காரைக்கால் அரசுப் பொது மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன்(64), கடந்த சில நாட்களாககாய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றார். அவரது ரத்தம், சளிமாதிரி எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டதில் கரோனா தொற்றுஇருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கரோனா சிறப்புவார்டில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரோடு தேர்தல் பணியில் ஈடுபட்ட நபர்கள் தாமாக முன்வந்து பரிசோதனை செய்துகொள்வதோடு, தாங்களாகவே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE