புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குகள் பதிவான அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களும் வாக்கு எண்ணும் மையமான புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரிக்கு பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டன.
பின்னர், மாவட்ட தேர்தல் அலுவலர் பி.உமாமகேஸ்வரி தலைமையில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைகள் நேற்று சீல் வைக்கப்பட்டன. அப்போது, விராலிமலை தொகுதி மாத்தூர் பகுதியில் உள்ள 27-வது வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்பட்ட முகவர்களின் கையெழுத்துகளுடன் கூடிய காகித சீல் ஒன்று, வாக்கு எண்ணும் மையத்தில் கிடந்தது.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த திமுக, அமமுக வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் ஆகியோர் வாக்குப்பதிவு இயந்திரம் மாற்றப்பட்டிருக்கலாம் என சந்தேகித்து, இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர் பி.உமா மகேஸ்வரியிடம் புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து தேர்தல் பொது பார்வையாளர் ஜி.ரகு, மாவட்ட தேர்தல் அலுவலர் பி.உமாமகேஸ்வரி ஆகியோர் கூறும்போது, ‘‘வாக்குப்பதிவு தொடங்கும் முன் முகவர்கள் முன்னிலையில் நடத்தப்படும் மாதிரி வாக்குப்பதிவின்போது, விவிபேட் இயந்திரத்தில் இருந்து சேகரிக்கப்படும் ஒப்புதல் சீட்டுகளை ஒரு கவரில் வைத்து, முகவர்கள் கையெழுத்துகளுடன் காகித சீல் வைக்கப்படும். அந்த சீல்தான் தவறுதலாக இங்கு கிடந்துள்ளது. இதற்கும், வாக்குப்பதிவு இயந்திரத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை’’ என தெரிவித்தனர். எனினும், இந்த விளக்கத்தை திமுக, அமமுகவினர் ஏற்க மறுத்தனர்.
இதையடுத்து, வாக்கு எண்ணும் மையத்தில் விராலிமலை தொகுதிக்கான பாதுகாப்பு அறையின் சீல் அகற்றப்பட்டு, அங்கிருந்த 27-வது வாக்குச்சாவடிக்கான வாக்குப்பதிவு இயந்திரம் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, அந்த வாக்குப்பதிவு இயந்திரத்தில் சீல் பிரிக்காமல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, ஆட்சேபனை தெரிவித்தவர்கள் சமாதானம் அடைந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago