தபால் வாக்கை பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தது தொடர்பாக ஆசிரியை, அவரது கணவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தபால் வாக்குச்சீட்டை பதிவுசெய்து, அதை சமூக வலைதளங்களில் பரப்பியதாக தென்காசி மாவட்டம், சுரண்டை ஆர்.சி. நடுநிலைப் பள்ளி ஆசிரியை சகாய ஆரோக்கிய அனுஷ்டாள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். ஆனால், ஆசிரியை சகாய ஆரோக்கிய அனுஷ்டாள் தபால் வாக்கையே பெறவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து, தேர்தல் அதிகாரிகள் மீண்டும் விசாரணை நடத்தினர். முகநூலில் பதிவேற்றம் செய்யப்பட்டது ஆசிரியை சகாய ஆரோக்கிய அனுஷ்டாளின் தபால் வாக்குப்படிவம் அல்ல என்றும், வெள்ளக்கால் கிராம நடுநிலைப் பள்ளி ஆசிரியைகிருஷ்ணவேணி (50) என்பவருடையது என்றும் தெரியவந்தது.
தேர்தல் பயிற்சி வகுப்புக்குச்சென்ற கிருஷ்ணவேணி, தபால்வாக்கு படிவத்தை பெற்றுக்கொண்டு வந்துள்ளார். அதைதனது மகனிடம்காட்டி, எப்படி வாக்களிக்க வேண்டும் என விளக்கியுள்ளார். தபால் வாக்குச்சீட்டு படிவத்தை கிருஷ்ணவேணியின் கணவர் கணேஷ் பாண்டியனின் செல்போனில், அவரது மகன் பதிவு செய்துள்ளார். அப்புகைப்படம் வாட்ஸ்அப் மூலம் பரவ, அதை தென்காசி தேங்காய் வியாபாரி செந்தில்குமார் முகநூலில் பகிர்ந்துள்ளார். கிருஷ்ணவேணி, அமமுகபிரமுகரான அவரது கணவர் கணேஷ் பாண்டியன் (50), செந்தில்குமார் (47) ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அவரது தபால் வாக்கு ரத்து செய்யப்படும் என்று தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago