கடந்த 50 ஆண்டுகளாக பாதுகாத்த தமிழகத்தை சிதைக்கப் பார்க் கின்றனர் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் எ.வ.வேலு (திருவண்ணாமலை), பிச்சாண்டி (கீழ்பென்னாத்தூர்), கிரி (செங்கம்), சரவணன் (கலசப்பாக்கம்), சேகரன்(போளூர்), அன்பழகன் (ஆரணி), ஜோதி (செய்யாறு), அம்பேத்குமார் (வந்தவாசி) ஆகியோரை ஆதரித்து திருவண்ணாமலையில் ஸ்டாலின் நேற்று பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது, “திமுக ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக, ‘இந்துக்களின் விரோதி திமுக’ என எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்கிறது. யாருடைய நம்பிக்கைக்கும் திமுக இடையூறாக இருப்பது இல்லை. அனைவரது உணர்வுக்கும் மதிப்பளிக்கும் வகையில் எனது ஆட்சியிருக்கும் என உறுதிமொழி அளிக்கிறேன்.
இந்திக்கு திமுக எதிரி அல்ல. இந்தியை வேண்டாம் எனச் சொல்லவில்லை, திணிக்கக் கூடாது என்கிறோம். கடந்த 50 ஆண்டுகளாக பார்த்துப் பார்த்துப் பாதுகாக்கப்பட்ட தமிழகத்தை சிதைக்கப் பார்க்கிறார்கள். தலையை கொடுத்தாவது தமிழகத்தை திமுக பாதுகாக்கும். நாம் ஆட்சிக்கு வர வேண்டும் என சொல்லவில்லை. ஆட்சியில் இருந்தால்தான், தமிழகத்துக்கு எதிராக நடைபெறும் செயல்களை தடுக்க முடியும்.
ஒரு அதிமுக எம்எல்ஏ வெற்றிபெற்றால், அவர் அதிமுக எம்எல்ஏவாக இருக்க மாட்டார். பாஜக எம்எல்ஏவாக இருப்பார். இதற்கு உதாரணம், நாடாளுமன்றத் தேர்தலில் ஒரே இடத்தில் வெற்றி பெற்ற துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன் வெற்றி பெற்றவர், அதிமுக எம்பியாக இல்லாமல் பாஜக எம்பியாக இருக்கிறார்.
பல்லாவரத்தில் பிரச்சாரம்
பல்லாவரம் தொகுதி திமுக வேட்பாளர் இ.கருணாநிதி, ஆலந்தூர் தொகுதி திமுக வேட்பாளர் தா.மோ.அன்பரசன், சோழிங்கநல்லூர் தொகுதி திமுகவேட்பாளர் ரமேஷ் அரவிந்தை ஆதரித்து ஸ்டாலின் பல்லாவரத்தில் நேற்று இரவு பிரச்சாரம் செய்தார். அவர் பேசியதாவது:திமுக ஆட்சிக்கு வந்தவுடன், அரசு துறைகளில் உள்ள 3 லட்சத்து 50 ஆயிரம் காலிப் பணியிடங்களை தமிழக இளைஞர்களை மட்டும் கொண்டு நிரப்பப்படும். சென்னைபுறநகர் பகுதிகளில் மினி பேருந்து சேவை அதிகரிக்கப்படும். அனைத்து பகுதிக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும். அனைத்து ஏரிகளும் தூர்வாரப்படும்.
சோழிங்கநல்லூர் பகுதி முதல் ஒக்கியம் மடுவு வரை மிகப்பெரிய அளவில் மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்தப்படும். நன்மங்கலம் ஏரி தூர்வாரப்பட்டு படகு விடப்படும். ஒஎம்ஆர் சாலை பகுதியில் புதிதாக அரசு மருத்துவமனை அமைக்கப்படும். கண்ணகி நகரில் அரசுபாலிடெக்னிக் கல்லூரி தொடங்கப்படும். பல்வேறு இடங்களில் நூலகங்கள் அமைக்கப்படும். வடநெமிலி கடல்நீர் குடிநீராக்கும் திட்டம் தோமையார்மலை தெற்கு பகுதி வரை விரிவுபடுத்தப்படும்.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago