என்னை போலி விவசாயி என விமர்சிப்பதா? : ஸ்டாலினுக்கு முதல்வர் பழனிசாமி கண்டனம்

என்னை ஒரு போலி விவசாயி என்கிறார் ஸ்டாலின். விவசாயத்தில் போலி விவசாயி என்று உண்டா? விவசாயிகளுக்கு துரோகம் செய்த கட்சி திமுகதான் என முதல்வர் பழனிசாமி பேசினார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், பழநி தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின்போது உருப்படியாக எதையும் பேசாமல், கட்சித் தலைவர்களை விமர்சித்து வருகிறார். அதிமுகதான் நாட்டு மக்களுக்கு நன்மை செய்யக்கூடிய இயக்கம். என்னை ஒரு போலி விவசாயி என்கிறார். விவசாயத்தில் போலி விவசாயி என்று உள்ளனரா? விவசாயிகளுக்கு துரோகம் செய்த கட்சி திமுகதான்.

100 நாள் வேலைத் திட்ட வேலை நாட்கள் உயர்த்தப்படும், கேபிள் டிவி இணைப்பு, 6 காஸ்சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும். இல்லத்தரசிகளின் சுமையைக் குறைக்க வாஷிங் மெஷின் வழங்கப்படும்.

வேடசந்தூர் தொகுதிக்குட்பட்ட குஜிலியம்பாறையை தனித் தாலுகாவாக அறிவித்தது அதிமுக அரசு.வேடசந்தூர் தொகுதியில் உணவுப்பூங்கா, முருங்கை பதப்படுத்தும்நிலையம் அமைக்கப்படும். தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இடம் கிடைத்தும் பணம் இன்றி படிக்கஇயலாத மாணவர்களின் கல்விச்செலவை அரசேஏற்றது. ஏழை மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதுதான் அதிமுக அரசு. அதைலட்சியமாகக் கொண்டு செயல்படுகிறோம் என்றார்.

கரூரில் முதல்வர் விமர்சனம்

கரூர் மாவட்டத்தில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கிருஷ்ணராயபுரம் என்.முத்துக்குமார், குளித்தலை என்.ஆர்.சந்திரசேகர் மற்றும் அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலை ஆகியோரை ஆதரித்து கரூரில் முதல்வர் பழனிசாமி நேற்று பிரச்சாரம் செய்தார்.

அப்போது திமுக விவசாய அணி மாநிலச் செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் ம.சின்னசாமி, ரஜினி ரசிகர் மன்ற மாவட்டச் செயலாளர் பரமேஸ்வரன் ஆகியோர் முதல்வர் பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

பிரச்சாரத்தில் முதல்வர் பேசியதாவது:

திமுகவில் உண்மை, உழைப்பு, தியாகத்துக்கு இடம் கிடையாது. முன்னாள் அமைச்சர் சின்னசாமி அதிமுகவில் இணைந்திருப்பது மகிழ்ச்சி. திமுக குடும்பக் கட்சி. அது கட்சி என்று சொல்வதை விட கார்ப்பரேட் கம்பெனி என்று சொல்லலாம். அங்கு ஷேர் வாங்கிசேர்ந்திருப்பவர்தான் செந்தில்பாலாஜி.

அதிமுக ஜனநாயக இயக்கம். உழைத்தால் உயர்ந்த இடத்துக்கு வரமுடியும். கிளைச் செயலாளராக தொடங்கி இன்று முதல்வராக உயர்ந்து மக்கள் பணி செய்கிறேன். மக்கள்தான் முதல்வர். மக்கள் போடும் உத்தரவை செயல்படுத்துவதுதான் முதல்வர் பணி.

அதிமுக ஊழல் செய்வதாக ஸ்டாலின் கூறுகிறார். ஆனால்,பக்கத்தில் யாரை வைத்திருக்கிறார்? இங்கிருந்த செந்தில்பாலாஜியை தான் வைத்திருக்கிறார். நல்லவருக்கு வாக்களியுங்கள். நிறம் மாறும் பச்சோந்திக்கு அல்ல. திமுக என்றாலே அராஜக கட்சி, ரவுடி கட்சி என்று கூறலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.இதைத் தொடர்ந்து அரவக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து க.பரமத்தியில் முதல்வர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்