அதிமுக அரசு மீண்டும் அமைந்ததும் ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என முதல்வர் பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல்வர் பழனிசாமி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வந்தவாசி சட்டப்பேரவைத் தொகுதி பாமக வேட்பாளர் முரளிசங்கரை ஆதரித்து பேசும்போது, “இந்தியாவிலேயே தமிழகத்தில் அதிகபட்சமாக பயிர் காப்பீடு திட்டத்தின்கீழ், கடந்த 4 ஆண்டுகளில், ரூ.9,300 கோடி, விவசாயிகளுக்கு பெற்று தரப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடன் ரூ.12,110 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது” என்றார்.
இதையடுத்து செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் தூசி கே.மோகனை ஆதரித்து பேசும்போது, “பொங்கல், கரோனா பாதிப்பு என ஒரே ஆண்டில் ஒரு குடும்பத்துக்கு ரூ.4,500 வழங்கப்பட்டுள்ளது.
முதல்வராக இருந்த ஜெயலலிதாவால் 2,500 ஏக்கரில் உருவாக்கப்பட்ட செய்யாறு சிப்காட்டில் 1 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். 14 கி.மீ. தொலைவுக்கு 4 வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. ரூ.100 கோடி மதிப்பில் சிப்காட் விரிவாக்கம் செய்யப்படும். மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதால், 435 மாணவர்கள் மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் படிக்கின்றனர்“ என்றார்.
ஆரணி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் சேவூர் எஸ்.ராமச்சந்திரனை ஆதரித்து பேசும்போது, “மீண்டும் அதிமுக அரசு அமைந்தவுடன் ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும்” என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago