தமிழகத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளோம். அதில் எந்த தவறும் இல்லை என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் போட்டியிடும் அதிமுக, பாமக, பாஜக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் பழனிசாமி நேற்று பிரச்சாரம் செய்தார். திருக்கோவிலூர் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் விஏடி கலிவரதனை ஆதரித்து முதல்வர் பழனிசாமி பேசியதாவது:
மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால்தான் மாநில அரசுக்குதேவையான நிதி கிடைக்கும்.மத்திய, மாநில அரசுகள் இணைந்துசெயல்பட்டால்தான் முழுமையான நிதி பெற்று. மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்ற முடியும். அதைத்தான் மத்திய பாஜக அரசுடன்இணைந்து அதிமுக அரசு செயல்படுத்தி வருகிறது.
கடந்த 1999 முதல் 2004 வரைபாஜகவுடன் திமுக கூட்டணிஅமைத்து, மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்தது. அப்போது முரசொலி மாறனுக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை துறை இல்லாத அமைச்சராக வைத்திருந்தது பாஜக அரசு. இதை ஸ்டாலின் மறுக்க முடியுமா? பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தால் சரி, அதிமுக கூட்டணி வைத்தால் தவறா? தமிழகத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டே பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளோம். அதில் எந்த தவறும் இல்லை.
வேண்டுமென்றே திட்டமிட்டுஅதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளை ஸ்டாலின் அவதூறாக பேசிவருகிறார். அதிமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் திமுக போன்ற பச்சோந்திக் கட்சி இல்லை. அடிக்கடி கட்சி மாறி கூட்டணி வைக்கும் கட்சி திமுக.
நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம்திமுகவுக்கு கிடையாது. குடும்பத்தில் உள்ள அனைவரும் அதிகாரத்துக்கு வரவேண்டும் என்பதுதான் அவர்களது கொள்கை. எதிர்கால இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்று திட்டமிடும் பாஜக நம்முடன் உள்ளது. பாமக வலிமையான கட்சி, மக்களின் செல்வாக்கான கட்சி. அப்படிப்பட்ட தலைவர்கள் உள்ள கூட்டணி நம் கூட்டணி.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.
தொடர்ந்து விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சி.வி சண்முகத்தை ஆதரித்து முதல்வர் பேசியதாவது:
தோல்வி பயத்தில் ஸ்டாலின் ஏதேதோ பேசுகிறார். தொடர்ந்து நான்கரை ஆண்டுகாலம் என் தலைமையில் அதிமுக அதிகாரத்தில் உள்ளது. இதை ஸ்டாலினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
கட்சி நிர்வாகிகளின் வாரிசுகள் தேர்தலில் நிற்பதில் எந்த தவறும்இல்லை. ஆனால், தலைவர் ஆவதுதான் தவறு. திமுகவில் கருணாநிதி, ஸ்டாலின், இப்போது உதயநிதி. இது வாரிசு அரசியல்தானே.
அதிமுக ஆட்சியில் இ-டெண்டர் மூலம் பணிகள் விடப்பட்டன. 8 ஒப்பந்தப் புள்ளிகளை திமுகவினர் பெற்றுள்ளனர். உங்கள் ஆட்சியில் ஷெட்யூல் டெண்டர் என்பதுகூட ஸ்டாலினுக்கு தெரியவில்லை.
நான் பெரும்பான்மை எம்எல்ஏக்கள் ஆதரவோடு முதல்வர் ஆனேன். சட்டம் இயற்றும் சட்டப்பேரவையில் பேரவைத் தலைவரின் இருக்கையில் அமர்ந்து அராஜகம் செய்தவர்கள் திமுகவினர். நாட்டில் ஊழலுக்காக கலைக்கப்பட்ட கட்சி திமுக. கருணாநிதி ஆட்சிக்கு வந்தவுடன் ஊழல் பிறந்தது. தற்போது திமுகவினருக்கு ஊழல் வியாதியாக தொற்றிக்கொண்டது. உண்மை நீதி, நேர்மைதான் வெல்லும். அது நம்மிடம் உள்ளது. அதனால் நாம் கட்டாயம் வெல்வோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, விக்கிரவாண்டி அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வன், மயிலம் பாமக வேட்பாளர் சிவகுமார், திண்டிவனம் அதிமுகவேட்பாளர் அர்ஜுனன், திருச்சிற்றம்பலம் கூட்டுச்சாலையில் வானூர்அதிமுக வேட்பாளர் சக்கரபாணி ஆகியோரை ஆதரித்து முதல்வர்பழனிசாமி பிரச்சாரம் செய்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago