தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிகரிக்கும் கரோனா பரவல் - அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காத 2 பள்ளிகளுக்கு அபராதம் : தனியார் பள்ளி மீது வழக்குப்பதிவு

தஞ்சாவூர் மாவட்டத்தில் கல்வி நிறுவனங்களில் கரோனா பாதிப்புதொடர்ந்து அதிகரித்து வரும்நிலையில், அரசின் வழிகாட்டுதல்களை முறையாக கடைபிடிக்காத 2 பள்ளிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. மாவட்டம் முழுவதும் ஒரு தனியார் பல்கலைக்கழகம், 2 கல்லூரிகள், 10 பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் என பலர் கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகி, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஏற்கெனவே கரோனா தொற்று கண்டறியப்பட்ட பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் மேலும் 11மாணவ - மாணவியர், ஒரு ஆசிரியர், 2 வாகன ஓட்டுநர்கள் மற்றும் தஞ்சாவூர் எம்கேஎம் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 15 மாணவ, - மாணவியர் என 29 பேருக்கு புதிதாக கரோனா தொற்று நேற்று உறுதியானது.

இதையடுத்து, பட்டுக்கோட்டை தனியார் பள்ளியில் ஆய்வு செய்த ஆட்சியர் கோவிந்தராவ், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைபிடிக்காததால், கரோனா பரவிய கும்பகோணம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.12 ஆயிரமும், தஞ்சாவூர் தனியார் பள்ளிக்கு ரூ.5 ஆயிரமும் மாநகராட்சி சார்பில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், முன்னெச்சரிக்கைஇன்றி செயல்பட்டதாக தஞ்சாவூர் தனியார் பள்ளி மீது காவல் துறை \வழக்குப் பதிவு செய்துள்ளது.

தற்போது பரவும் கரோனா 2-வது அலையை எதிர்கொள்ள பொதுமக்கள் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி ஆகியவற்றை அவசியம் கடைபிடிக்க வேண்டும் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE