பெருந்துறை அதிமுக எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம், சேந்தமங்கலம் அதிமுக எம்எல்ஏ சி.சந்திரசேகரன் ஆகியோர் மீண்டும் போட்டியிட கட்சித் தலைமை வாய்ப்பு வழங்காததால், அதிமுக வேட்பாளர்களை எதிர்த்து நேற்று சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்தனர்.
பெருந்துறை தொகுதி அதிமுகஎம்எல்ஏ தோப்பு வெங்கடாசலத்துக்கு, இம்முறை தேர்தலில் போட்டியிட அதிமுக தலைமை வாய்ப்பு அளிக்கவில்லை. அவருக்கு பதிலாக அதிமுக வேட்பாளராக ஜெயக்குமார் போட்டியிடுகிறார். தனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதற்கு நியாயம் கேட்டு முதல்வர் பழனிசாமியை சந்தித்து, தோப்பு வெங்கடாசலம் முறையிட்டார். அதன் பிறகும் வேட்பாளர் மாற்றப்படாத நிலையில், நேற்று பெருந்துறை தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட தோப்பு வெங்கடாசலம் மனுதாக்கல் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
அதிமுகவில் உழைத்தவர்களுக்கு வாய்ப்பு தராதது மனவேதனை அளிக்கிறது. என்னால் பயன் பெற்றவர்கள் என்னை நினைக்காமல் போகலாம். ஆனால்மக்கள் என் பணியை நினைத்துபாராட்டுகிறார்கள். 10 ஆண்டுகளில் தொகுதியில், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தந்துள்ளேன்.
குடிநீர் பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது. ஒரு எம்எல்ஏ எப்படிஇருக்க வேண்டும் என்பதற்குஉதாரணமாக இருந்துள்ளேன். தொகுதியில் பல்வேறு நலத்திட்டங்கள் செய்துள்ளதால், பொதுமக்களின் ஆதரவு நிச்சயம் கிடைக்கும் என்பதால் சுயேச்சையாகப் போட்டியிடுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
சேந்தமங்கலம் எம்எல்ஏ
இதுபோல, சேந்தமங்கலம் தொகுதி அதிமுக எம்எல்ஏ சுயேச்சையாக போட்டியிட நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் (தனி) சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏவாக உள்ளஅதிமுகவைச் சேர்ந்த சி.சந்திரசேகரன் மீண்டும் போட்டியிட விருப்ப மனு அளித்திருந்தார். எனினும், அவருக்கு கட்சித் தலைமை வாய்ப்பு வழங்காமல், எஸ்.சந்திரன் என்பவருக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது.
இதையடுத்து, எம்எல்ஏ சந்திரசேகரன் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்து, அவர் நேற்று சேந்தமங்கலம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆர்.ரமேஷிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
மேலும், தனது உயிருக்கு ஆபத்து உள்ளது என்றும், பாதுகாப்பு அளிக்கக் கோரியும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
இதையடுத்து, அவரது பாதுகாப்புக்காக 3 போலீஸார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சேந்தமங்கலம் தொகுதியில் 1996-2001 மற்றும் 2016-2021என இருமுறை சந்திரசேகரன்எம்எல்ஏவாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சந்திரசேகரன் நீக்கம்
இதற்கிடையே, சந்திரசேகரனை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விடுவித்து கட்சியின் ஒருங்கிணைப் பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் உத்தரவிட்டுள்ளனர்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago