கடலூரில் அமைச்சர் எம்.சி.சம்பத்தின் ஆதரவாளர்கள் 5 பேரின் வீடுகளில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
கடலூரில் அமைச்சர் சம்பத்தின் ஆதரவாளர்களான கடலூர் சூரப்பநாயக்கன் சாவடியைச் சேர்ந்த மாவட்ட ஜெ. பேரவை பொருளாளர் மதியழகன், கம்மியம்பேட்டையைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் தமிழ்ச்செல்வன், புதுப்பாளையம் ராமதாஸ் தெருவைச் சேர்ந்த அதிமுக மாவட்ட இணை செயலாளர் உமா மகேஸ்வரி பாலகிருஷ்ணன், அதிமுகவைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் திருப்பாதிரிபுலியூர் சுரேஷ், செம்மண்டலம் பகுதி அதிமுக பிரமுகர் பைனான்சியர் சரவணன் ஆகிய 5 பேர் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று மதியம் 12 மணியில் தனித்தனிக் குழுவாக வந்து சோதனையில் ஈடுபட்டனர்.
கடலூர் மற்றும் கடலூர் புறநகர் பகுதிகளில் இந்த 5 பேரின் வீடுகளும் உள்ளன. சோதனை நடைபெறும் வீடுகளுக்குள் யாரையும் விடவில்லை. அதேபோல 5பேரின் வீடுகளுக்குள் இருப்பவர்களையும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. இந்த 5 பேரும் அமைச்சர் சம்பத்துக்கு ஆதரவாக கடந்த சில நாட்களாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்ய, இந்த 5 பேர் வீடுகளில் பணம் வைக்கப்பட்டிருந்தாக வந்த தகவலின் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் இந்தச் சோதனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் பரவியது. இதனால் சோதனை நடைபெறும் தெருக்களில், தகவல் அறிந்து கூட்டம் கூடியதால், போலீஸார் குவிக்கப்பட்டு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டது. நேற்று மதியம் தொடங்கிய இச்சோதனை இரவு வரை நீடித்தது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago