தமிழகத்தில் 39 தொகுதிகளில் எம்.பி.க்களாக உள்ளவர்களால் ஏதாவது முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறதா என ஈரோடு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கமல்ஹாசன் கேள்வி எழுப்பினார்.
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மநீம வேட்பாளர்களை ஆதரித்து நேற்று முன்தினம் இரவு பிரச்சாரம் மேற்கொண்டார். ஈரோடு திருநகர் காலனியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் பேசியதாவது:
சட்டப்பேரவைத் தேர்தலில் யாரைத் தேர்வு செய்யலாம் என்ற குழப்பம் உங்களுக்கு இருக்கலாம். ஊழலுக்கு மாற்று ஊழலாக இருக்க முடியாது. ஒரு வியாதிக்கு மாற்று மருந்தாகத்தான் இருக்க வேண்டும். அதே மற்றொரு வியாதியாக இருக்க முடியாது.
வாக்குவங்கிக்காக சாதியைப் பயன்படுத்துகின்றனர். ஊழலை மறைக்கும் போர்வையாக சமஉரிமை, சமத்துவத்தை பயன்படுத்துகிறார்கள்.
ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காண்கிறேன் என்று கூறி ஆட்சிக்கு வந்தார்கள். ஏழைகள் இல்லாத நிலை உருவாகி விட்டதா?தாய் மொழியை காப்பாற்றி விட்டார்களா? தமிழகத்தில் 39 தொகுதிகளில் எம்.பி.க்களாக உள்ளவர்களால் ஏதாவது முன்னேற்றம் இருக்கிறதா? தமிழகத்தில் ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்றால் பெரிய அய்யாவுக்கு 40 சதவீதம், சிறிய அய்யாவுக்கு 30 சதவீதம் என்று லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது. எனக்கு நண்பர் லஞ்சம் கொடுக்க முடியாமல், முதல்வருக்கு கடிதம் எழுதிவிட்டு, பொது இடத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பாதி டாஸ்மாக் கடைகளை மூடுவோம். மது குடிப்பதை விடமுடியாமல் தவிப்பவர்களுக்கு, மறுவாழ்வு மையங்களை டாஸ்மாக் கடைகளுக்கு அருகிலேயே தொடங்குவோம். வீட்டுக்கு ஒரு கணினி கொடுப்பேன். அதன்மூலம் இடைத்தரகர்கள் இல்லாமல் நீங்கள் என்னோடு நேரடியாகப் பேசலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago