கர்நாடகா அணை கட்டுவதை தடுக்காவிட்டால் மேகேதாட்டுவில் முற்றுகைப் போராட்டம் : காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலர் பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

கர்நாடகா அணை கட்டுவதைத் தடுக்காவிட்டால், மேகேதாட்டுவில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகம் நோக்கி வரக்கூடிய காவிரி உபரிநீரை தடுக்கும் வகையில், மேகேதாட்டு பகுதியில் அணை கட்டுவதற்காக, கர்நாடக அரசு தனது பட்ஜெட்டில் ரூ.9 ஆயிரம் கோடி நிதியை ஒதுக்கி அறிவித்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் உள்நோக்கம் கொண்டது.

ஏற்கெனவே, மேகேதாட்டு அணை கட்ட உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும், காவிரி தொடர்பான அனைத்து அணைகளும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், கர்நாடக அரசுஇவ்வாறு செய்வது திட்டமிட்டு தமிழகத்தை அழிக்கும் உள்நோக்கம் கொண்டது.

மேகேதாட்டுவில் அணை கட்டப்பட்டால், தமிழகத்தில் 30 மாவட்டங்களில் வாழக்கூடிய 5 கோடிமக்களுடைய குடிநீர் ஆதாரம் பறிபோகும். 25 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாலைவனமாக மாறும்.

எனவே, உடனடியாக இத்திட்டத்தை தடுத்து நிறுத்த மத்திய அரசும், காவிரி மேலாண்மை ஆணையமும் முன்வர வேண்டும். இல்லையெனில், தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மேகேதாட்டுவில் அணை அமைய உள்ள பகுதியில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்