சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட கல்லணை - நமது பண்டைக்கால சமுதாயத்தினரின் பொறியியல் திறமைக்கு சான்றாகும் : பல்கலை பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் பெருமிதம்

By செய்திப்பிரிவு

சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட கல்லணை, நமது பண்டைக்கால சமுதாயத்தினரின் பொறியியல் திறமைக்கு சான்றாகத் திகழ்கிறது என திருவள்ளுவர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த் பெருமிதம் தெரிவித்தார்.

வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 16-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. 80,176 மாணவ - மாணவியருக்கான பட்டமளிப்பு விழாவில் 283 பேர் பட்டங்களைப் பெற அழைக்கப்பட்டிருந்தனர்.

பட்டமளிப்பு விழாவுக்கு தமிழக ஆளுநரும், திருவள்ளுவர் பல்கலைக்கழக வேந்தருமான பன்வாரிலால் புரோஹித் தலைமை தாங்கினார். பல்கலைக்கழக துணைவேந்தர் தாமரைசெல்வி வரவேற்றார். இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தங்கப்பதக்கம் பெற்ற 10 மாணவ - மாணவியருக்கு பட்டங்களை வழங்கிப் பாராட்டினார். பின்னர், ‘திருவள்ளுவர் பல்கலைகழகத்தின் 16-வது வருடாந்திர பட்டமளிப்பு விழாவில் உங்கள் அனைவருடன் இருப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்’ என தமிழில் தனது விழா பேருரையை தொடங்கிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசும்போது, “மனித குலத்துக்கு சாகாவரம் பெற்ற அறக் கருத்துகளை வழங் கிய திருவள்ளுவரின் பெயரில் இப்பல்கலைக்கழகம் உள்ளது. அவரது குறள் உங்களது கல்வி மற்றும் வாழ்க்கையில் ஒன்றிணைந்த பகுதியாக இருக்கவேண்டும். நான் தமிழகத்துக்கு வரும்போதெல்லாம், இங்குகடைபிடிக்கப்படும் பாரம்பரியத்து டன் எனக்கு தொடர்பு உள்ளதைப் போல உணர்கிறேன்.

நீர் மேலாண்மையில் சிறந்தவர்கள் தமிழர்கள். பொறியியல் அற்புதங்களில் ஒன்றான கல்லணையைக் கொண்ட தமிழகம் இலக்கியத்தில் தனித்துவம் பெற்றுள்ளது. உலகின் சிறந்த பாசன முறைக்கு உதாரணமாக பழமையான அணைகளில் ஒன்றாக கல்லணை திகழ்கிறது.

தஞ்சையில் காவிரி ஆற்றின் குறுக்கே சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட கல்லணை, நமது பண்டைக்கால சமுதாயத்தினரின் பொறியியல் திறமைக்கு சான்றாகத் திகழ்கிறது. அறிவும், அறிவியல் உணர்வும், இந்த மக்களின் உள்ளார்ந்த பண்பாகத் தோன்றுகிறது.

‘கண்ணுடையர் என்பவர் கற்றோர்’ என்ற திருவள்ளுவரின் அறிவார்ந்த வார்த்தைகள் உங்களது லட்சியமாகத் திகழ்கின்றன.

இந்த பல்கலைக்கழக மாணவர்களில் 65 சதவீதம் பேர் பெண்கள் என்பதை அறிந்து நான் பெரு மகிழ்ச்சியடைகிறேன். இங்கு, தங்கப் பதக்கம் பெற்ற 66 பேரில் 55 பேர் பெண்கள், ஆராய்ச்சி பட்டம் பெற்ற 217 பேரில் 100 பேர் பெண்கள், இந்த மேடையில் பதக்கம் பெற்ற 10 மாணவர்களில், 9 பேர் பெண்கள் என்பதை பெருமையாக நினைக்கிறேன்.

பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன்பே, இந்தியாவில் செழுமையான கல்வி முறை இருந்ததை காந்தி யடிகள் ‘அழகிய மரம்’ என்று குறிப்பிட்டார். அதை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் சீர்திருத்தம் என்ற பெயரால் வெட்டித் தள்ளினர். நமது பாரம்பரியத்தை மீட்க தேசிய கல்விக் கொள்கை-2020 திட்டமிடப்பட்டு எடுக்கப்பட்ட உறுதியான முடிவாகும்.

இந்தக் கல்வி முறையிலிருந்து வெளி வரும் மாணவர் அதிக தன்னம்பிக்கையுடனும் எதிர்காலத்தில் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் தகுதியை உடையவராகவும் இருப்பர். அதிக பொருளாதார வளர்ச்சி அதிக முன்னேற்றம் ஆகியவற்றை இந்தியா அடைந்துள்ளதால், நம்மிடம் இருந்து அதிகமாக கற்றுக் கொள்ளும் ஆவலுடன் உலகம் நம்மைநோக்கி திரும்பியுள்ளது. இந்தியாவின் சகாப்தத்தில் புதிய அத்தியாயத்தை எழுதும் திறமை உங்கள் ஒவ்வொருவரிடமும் உள்ளது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்