முத்துப்பேட்டை அருகே ஆவணமின்றி எடுத்துச்சென்ற - 18.5 கிலோ தங்கம், ரூ.17 லட்சம் பறிமுதல் :

By செய்திப்பிரிவு

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு செல்லப்பட்ட 18.5 கிலோ தங்கம், கண்டெய்னர் வேனில் கொண்டு செல்லப்பட்ட ரூ.17 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை தேர்தல் பறக்கும் படையினர் நேற்று பறிமுதல் செய்தனர்.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள தம்பிக்கோட்டை சோதனைச் சாவடியில் நேற்று தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வங்கி ஒன்றின் கண்டெய்னர் வேனை சோதனையிட்டனர். அப்போது, அதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.17 லட்சம் ரொக்கம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்தப் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

சிறிது நேரத்துக்கு பின்னர், அந்த வழியாக வந்த ஒரு காரை மறித்து தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அதில், சேலம் மல்லூர் பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்பவர் நகைக் கடைகளுக்கு விற்பனை செய்வதற்காக உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற 18.5 கிலோ தங்கத்தையும் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கீதா, வட்டாட்சியர் ஜெகதீசன் ஆகியோரும் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்