தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்களும், ஆசிரியர் களும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் வாக்களிக்க ஏதுவாக தனி வாக்குச்சாவடிகளை அமைக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் நிறுவனர் மாயவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு:
சொந்த தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசுஊழியர்கள், தேர்தல் பணி சான்றி தழை சமர்ப்பித்து வாக்களிக்கவும், பிற பகுதிகளில் பணியமர்த்தப்படும் ஊழியர்கள் தபால் மூலமாக வாக்குகளை பதிவு செய்வதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன.
தபால் வாக்குகளை பதிவு செய்வதற்கான வாக்குச் சீட்டுகள் அரசு ஊழியர்களுக்கு கடைசி கட்ட பயிற்சியின்போதே வழங்கப்படுகின்றன. அந்த வாக்குச் சீட்டில் அதிகாரிகளின் அத்தாட்சி கையெழுத்தை பெற வேண்டியுள்ளது. அப்படியே அத்தாட்சி பெற்றாலும், பணியமர்த்தப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளுக்கு குறித்த நேரத்துக்குள் செல்ல வேண்டிய காரணத்தால் தபால் வாக்குகளை முறையாக பதிவு செய்வதற்கு போதிய அவகாசம் கிடைப்பதில்லை.
கடந்த மக்களவைத் தேர்தலின்போது 4.35 லட்சம் அரசு ஊழியர்களில், 3.97 லட்சம் பேர் மட்டுமேதபால் மூலமாக வாக்களித்தனர். சுமார் 37,712 பேர் தபால் வாக்குகளை செலுத்த முடியவில்லை. வாக்குகளை செலுத்தியவர்களில் 24,912 பேரின் வாக்குச்சீட்டுகள் அதிகாரிகளின் அத்தாட்சி கையெழுத்து இல்லாமல் நிராகரிக்கப்பட் டன. இதன்மூலம் மொத்தம் 62,624 பேரின் தபால் வாக்குகள் வீணாகிவிட்டன.
கரோனா தொற்று காரணமாக இந்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 90 ஆயிரமாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக தேர்தல் பணியில் சுமார் 6 லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட வேண்டிய நிலையில், நூறு சதவீத வாக்குப் பதிவை உறுதிசெய்யும் வகையில் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் குறித்த முழுமையான விவரங்களையும் வெளியிட வேண்டும்.
தேர்தலுக்கு 3 நாட்களுக்கு முன்பாக, தொடர்புடைய தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்கள் மற்றும்ஆசிரியர்கள் வாக்களிக்க ஏதுவாகதனி வாக்குச்சாவடிகளை அமைக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு விசாரணை நேற்று தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இதுதொடர்பாக விளக்கம்பெற அவகாசம் வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதையடுத்து நீதிபதிகள், இதுதொடர்பாக வரும் மார்ச் 8-க்குள் பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.
கடந்த மக்களவைத் தேர்தலின்போது 4.35 லட்சம் அரசு ஊழியர்களில், 3.97 லட்சம் பேர் மட்டுமே தபால் மூலமாக வாக்களித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago