சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ்தாஸ் மீது பெண் எஸ்பி கொடுத்தபுகாரை சிபிசிஐடி விசாரிக்க டிஜிபிஜே.கே.திரிபாதி உத்தரவிட்டுள் ளார்.
தமிழக சட்டம்-ஒழுங்கு சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ்தாஸ் மீது பெண் எஸ்பி ஒருவர் பாலியல் புகார் கொடுத்தார். அதைத் தொடர்ந்து ராஜேஷ்தாஸ் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். அவர் மீதான புகார் குறித்து விசாரணை நடத்த கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையில் 6 பேர் கொண்ட விசாகா கமிட்டியை தமிழக அரசு அமைத்துள்ளது.
ராஜேஷ்தாஸ் மீதான புகார்குறித்து சுதந்திரமாகவும், நேர்மையாகவும் விசாரணை நடத்த வேண்டும் என தமிழ்நாடு ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் அறிக்கை வெளியிட்டது.
பெண் எஸ்பி, எழுத்துபூர்வமான தனது புகாரை டிஜிபி ஜே.கே.திரிபாதியிடம் கொடுத்திருந்தார். அந்த புகார் மனு மீது சிபிசிஐடி விசாரணை நடத்த டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். பெண் எஸ்பி புகார் கொடுக்க வந்தபோது, செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் அவரது காரை வழிமறித்த காவல்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
காத்திருப்போர் பட்டியலில் இருந்தாலும், ராஜேஷ்தாஸ் இப்போதும் காவல் துறை பணியில் டிஜிபியாகவே இருக்கிறார். எனவே, அவரிடம் விசாரணை நடத்த சிபிசிஐடியில் ஐஜி அந்தஸ்துக்கு குறைவில்லாத நபரை நியமிக்க வேண்டும். உயரதிகாரி தலைமையில் விசாரணை நடந்தால்தான் உண்மைகளை வெளியே கொண்டுவர முடியும் என்று பெண்போலீஸார் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago