தமிழகத்தில் மூன்றாவது அணி அமைந்தால் பாஜகவுக்கு சாதகமாக அமையும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
காங்கிரஸ் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம் காரைக்குடியில் நேற்று நடைபெற்றது. இதில் அவர் பேசியதாவது: கட்சித் தலைவர்கள் முகம் பார்த்து வாக்களித்த காலம் இப்போது இல்லை. முகம் தெரிந்தவர்கள் தினமும் வீடு, வீடாகச் சென்று பிரச்சாரம் செய்தால்தான் வாக்களிப்பர்.
அமைச்சரவையைக் கூட்டாமல் 110 விதியின் கீழ் நகைக் கடனை ரத்து செய்தது விதிமீறல். பட்ஜெட்டில் ஒரு ரூபாய்கூட ஒதுக்காமல் கடன்களை ரத்து செய்துள்ளது கோமாளித்தனம். திமுககூட்டணியில் சிவகங்கை தொகு தியை காங்கிரஸுக்கு ஒதுக்கும்படி கேட்டு வருகிறோம் என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அதிமுக அரசு வெற்றுப் பேச்சு அரசு. அதற்குப் பின்னணியில் குரல் கொடுப்பது மோடியும், அமித் ஷாவும்தான். பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது பெரும் கொள்ளை.
மாணவர்களின் திறமையைப் பரிசோதிக்கத் தேர்வுகள் அவசியம். தேர்வை நடத்தி விட்டு அனைவருக்கும் தேர்ச்சிகொடுத்திருக்கலாம். தேர்தலுக் காக வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
ஒதுக்கீட்டை முதலில் கொண்டு வந்தது காங்கிரஸ்தான். அதனால் ஒதுக்கீட்டை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் உள்ஒதுக்கீடு விவாதத்துக்கு உட்பட்டது. அதற்காகதான் நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அக்குழு பணியை முடிக்காத நிலையில் உள் ஒதுக்கீட்டை அறிவித்துள்ளனர்.
திமுக-காங்கிரஸ் கூட்டணி வலிமையானது. மூன்றாவது அணி அமைந்தால் பாஜகவுக்குத்தான் சாதகமாக இருக்கும். இதை 3-வது அணி அமைக்க நினைப்பவர்கள் உணர வேண்டும்.
தமிழகத்தில் பாஜகவுக்கு எதிரான ஆட்சி அமைந்தால், திட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என ஹெச். ராஜா பேசியதுஅரசியல் சாசனத்துக்கு விரோதமானது. இதைத் தேர்தல் ஆணையம் கவனிக்க வேண்டும். பாஜகவைப் பொறுத்தவரை மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்களை விலை கொடுத்து வாங்கும் கட்சி. இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago