சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெற்றிபெற்று, மீண்டும் ஆட்சி அமைப்போம் என்று சட்டப்பேரவையின் நிறைவுக் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
தமிழகத்தில் தற்போதைய 15-வது சட்டப்பேரவையின் கடைசிக் கூட்டத்தொடரின் நிறைவு நாளான நேற்று முதல்வர் பழனிசாமி தனது நன்றியுரையில் பேசியதாவது:
இந்த ஆட்சி ஒரு மாதம்தான்இருக்கும் என்று எதிர்க்கட்சி தலைவர்கள், உறுப்பினர்கள் பிரச்சாரம் செய்து வந்தனர். அதையெல்லாம் முறியடித்து, எம்ஜிஆர், ஜெயலலிதா கண்ட கனவை என் தலைமையிலான அரசு வெற்றிகரமாக நிறைவேற்றி மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளது. மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை வழங்கியதன் மூலம், தமிழகம் வெற்றி நடைபோடும் தமிழகமாக உயர்ந்துள்ளது. ஆட்சிக்கு உறுதுணையாகவிளங்கிய துணை முதல்வர்ஓ.பன்னீர்செல்வம், தங்கள் துறைகளில் திறமையாக செயல்பட்டு தேசிய அளவில் விருதுகளைப் பெற்று, தமிழகத்துக்கு பெருமை சேர்த்து, எனக்கு முழு ஒத்துழைப்பு நல்கிய அமைச்சர்களுக்கு நன்றி.
‘எனக்குப் பின்னாலும் அதிமுக நூறாண்டு காலம் ஆளும்’ என்று சட்டப்பேரவையில் ஜெயலலிதா சூளுரைத்தார். அதற்கேற்ப சோதனையான காலத்தில் 4 ஆண்டு நிறைவு பெற்று 5-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அளவுக்கு சிறந்த ஆட்சி, நிர்வாகம் அமைய உறுதுணையாக இருந்த அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள், ஆளுங்கட்சி - எதிர்க்கட்சியினர் இடையே சூடான விவாதங்கள் நடைபெற்ற போது நடுநிலையாக, பக்குவமாக அவையை நடத்திய,பேரவைத் தலைவர், துணைத் தலைவர், அரசு கொறடாவுக்கும் நன்றி.
அரசு சிறப்பாக செயல்பட துணை நின்ற உயர் அதிகாரிகள், எனது துறை செயலாளர்கள், அரசு அலுவலர்களுக்கும் நன்றி.
காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் சட்டப் போராட்டம் நடத்தி தீர்ப்பை பெற்றது, டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது, வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணம், புயல், வெள்ளம் மற்றும் பருவம் தவறி மழை பெய்தபோதும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை, விவசாயிகள் பயிரிட்ட பயிர்கள் சேதமடைந்தபோது, நாட்டிலேயே அதிகமாக இழப்பீட்டுத் தொகையை பெற்றுத் தந்து,கண்ணை இமை காப்பதுபோலவேளாண் பெருமக்களை காத்துள்ளோம்.
மாநிலம் வளர்ச்சிபெற தடையில்லா மின்சாரம் வேண்டும். அதைவழங்கி தமிழகத்தை மின் மிகைமாநிலமாக உருவாக்கியதைப்போல, கல்வியில் வளர்ச்சி, புரட்சியை ஏற்படுத்தியதும், அதிகமான சட்டக் கல்லூரிகள், ஒரேநேரத்தில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகள், 3 கால்நடை மருத்துவக் கல்லூரிமற்றும் ஆராய்ச்சி நிலையங்கள் தொடங்கி சாதனை படைத்துள்ளோம். அதிக கல்லூரிகளைத் திறந்து, உயர்கல்வி படிப்பதில்நாட்டிலேயே முதல் மாநிலம் என்றபெருமையை பெற்றுள்ளோம். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையைக் கொண்டுவந்து, ஜெயலலிதாவின் கனவு நனவாக்கப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிரம்மாண்ட நினைவு மண்டபம், அவர் வாழ்ந்த வேதா நிலையத்தை அரசு இல்லமாக அறிவித்ததும் இந்த அரசுதான்.
எம்ஜிஆர், ஜெயலலிதாவின் கனவுகளை நனவாக்கும் விதமாக, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று, மீண்டும் அரசு அமைப்போம். எங்கள் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளும் அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago