மாநிலத்தின் கடன் நிலைமை குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, மாநில உள்நாட்டு உற்பத்திமதிப்பு உயர்வதால், மொத்த நிகரக்கடன் அளவு உயர்ந்துள்ளதாகவும், அவற்றை திரும்ப செலுத்துவதற்கான திறனும் அதிகரித்துள்ளதாகவும் விளக்கம் அளித்தார்.
இடைக்கால பட்ஜெட் மீதான விவாதத்துக்கு பதில் அளித்து துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பேரவையில் பேசியதாவது:
திமுக ஆட்சிக் காலமான 2006 -2007 முதல் 2010-2011 வரை மொத்தகடனாகப் பெற்ற தொகை ரூ.44,084 கோடி மட்டும் எனவும், அதிமுக ஆட்சியில் கடன் மட்டும் ரூ.3.55 லட்சம் கோடி என்றும், இவை தேவையற்ற செலவுகளுக்காக பயன்படுத்தப்படுகிறது எனவும் எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். இவை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கூறப்பட்ட முற்றிலும் தவறான வாதங்கள்.
கடன் அளவைப் பார்க்கும்போது, மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்புடன் ஒப்பிடுவதே சரியான அளவுகோல். 2010-11 ஆண்டு மொத்தக் கடன் 1 லட்சத்து 1,349 கோடியாக இருந்தது. அந்த ஆண்டின் மாநில உற்பத்தி மதிப்பு ரூ.5 லட்சத்து 18,576 கோடியாக இருந்தது.
தற்போது 2020-21-ல் மொத்தக் கடன் ரூ.4 லட்சத்து 85,502 கோடி. இந்த ஆண்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி மதிப்பு ரூ.19 லட்சத்து 43,399 கோடி.
அதாவது மாநிலத்தின் மொத்தஉள்நாட்டு உற்பத்தி மதிப்பு, உயர்ந்து கொண்டே வருவதால்,கடனின் அளவு உயர்ந்தாலும், அதை திருப்பிச் செலுத்துவதற்கான திறனும் அதிகரிக்கிறது.
இந்த நிதியாண்டில், கரோனா உள்ளிட்ட காரணங்களால் வருவாய் வரவினங்கள் பெருமளவில் குறைந்த போதிலும், செலவினங்கள் அதிகரித்துள்ளன. இப்பற்றாக்குறையை சமாளிக்க 15-வது நிதிக்குழு பரிந்துரைத்துள்ள கடன் அளவுக்குள் அரசு கடன் பெற்றுள்ளது. அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்தும் திறன் இருப்பதால்தான் உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கிஆகியவை போட்டி போட்டுக் கொண்டு கடன் தர முன்வருகின்றன.
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மாநில அரசே காரணம் என்று ஒரு தவறான கருத்து பரப்பப்பட்டு வருகிறது. விலை மதிப்பின் மீது மட்டும் வரிவிதிப்பு என்பதை மாற்றி, விலை மதிப்பு மற்றும் குறிப்பிட்ட வரி விகிதத்தின் அடிப்படையில் வரி விதிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி, பெட்ரோல் மீதான விற்பனை வரி 24 சதவீதத்தில் இருந்து 15 சதவீதம் விலை மதிப்பின் மீதும், அதனுடன் லிட்டருக்கு ரூ.13.2 என குறிப்பிட்ட வரியாகவும், டீசல் மீது 25 சதவீதத்தில் இருந்து 11 சதவீதம் விலை மதிப்பின் மீதும் அதனுடன் லிட்டருக்கு ரூ.9.62 குறிப்பிட்ட வரியாகவும் சீரமைக்கப்பட்டு கடந்தஆண்டு மே 4 முதல் அமல்படுத்தப்படுகிறது. மக்களின் நலனுக்காகவே வரியை அரசு மாற்றி அமைத்துள்ளது. பெட்ரோலிய பொருட்கள் மீது மத்திய அரசால் பல வரிகள், மேல் வரிகள் விதிக்கப்படுவதால் விலை உயர்கிறது. மத்தியபட்ஜெட்டில் கலால் வரியை குறைத்து, அதற்கு பதிலாக புதியவரிகளை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநில அரசுக்கு மத்திய வரியில் இருந்து கிடைக்க வேண்டிய வருவாய் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் முதல் மாநிலமாக தமிழகத்தை மாற்றிக் காட்டி உள்ளோம். 3-வது முறையாக ஆட்சிஅமைத்து புது வரலாறு படைப்போம். இவ்வாறு அவர் பேசினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago