துன்பம் வரும்போது எல்லாம், மக்களுக்கு பக்கபலமாக இருந்து வருவதையே இந்த அரசின் சாதனையாக நினைக்கிறேன் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
தமிழக முதல்வர் பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று செய்தியாளர்களை சந்ரதித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஏழை மக்கள் வைக்கும் கோரிக்கைகளை அரசு கவனமாக பரிசீலித்து நடைமுறைப்படுத்தி வருகிறது. ஆனால், திமுக தலைவரோ, அவர் சொல்லித்தான் இதையெல்லாம் நான் செய்வதாக கூட்டங்களில் உண்மைக்கு புறம்பான செய்தியை சொல்லி வருகிறார். அவர்கள் ஆட்சியில் இல்லை. எதை வேண்டுமானாலும் சொல்லலாம். ஆட்சியில் இருப்பவர்கள் சிந்தித்து, கணக்கிட்டு, பிறகுதான் அறிவிக்க முடியும். நாங்கள் கணக்கிடுவதை அவர் தெரிந்துகொண்டு தவறாக பிரச்சாரம் செய்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார். பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
தமிழக அரசு கடுமையான கடன் சுமை, நிதி நெருக்கடியில் இருக்கும்போது, கடன் தள்ளுபடி செய்தால் எப்படி சமாளிக்க முடியும்?
மக்களுக்கு பிரச்சினை வரும்போது மக்கள்தான் முக்கியம். கடன் வாங்கி வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தியதால்தான் கடன் உயர்ந்துள்ளது. கடந்த 2011-ல் ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் கோடி கடன் இருந்ததாக திமுக தலைவர் ஸ்டாலின் ஒப்புக்கொண்டுள்ளார். ஒரு சாலை அமைக்க அன்று தேவைப்பட்ட நிதி எவ்வளவு. இன்று தேவைப்படும் நிதி எவ்வளவு. அதற்கேற்ப கடன் பெற வேண்டிஉள்ளது. திமுக ஆட்சியிலும் உலக வங்கியில்கடன் வாங்கிதான் திட்டங்கள் நிறைவேற்றினர்.
தேர்தலை முன்னிட்டு நீங்கள் அறிவிப்புகள் வெளியிடுவதாக கூறப்படுகிறதே?
தேர்தலுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. எல்லோரும் தேர்தல் அறிக்கைதான் வெளியிடுவார்கள். ஆனால், அறிவித்ததோடு, நடைமுறைப்படுத்தும் அரசு இதுதான்.
ரூ.12,110 கோடி பயிர்க் கடன் தள்ளுபடி செய்துவிட்டு, அதற்கு ரூ.5 ஆயிரம் கோடி மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளதே.
அது நபார்டு வங்கியில் இருந்து வாங்கிய கடன். நபார்டு வங்கியுடன் தொடர்பு கொண்டு பேசி, அதை 5 ஆண்டுகளுக்கு பிரித்து கட்டுவோம்.
ரூ.40 ஆயிரம் கோடி டெண்டரை அரசு கடைசி நேரத்தில் வெளியிட்டுள்ளதாக புகார் வருகிறதே?
ரூ.40 ஆயிரம் கோடி என திட்டத்தின் மதிப்பை வைத்து கூறுகின்றனர். திட்டம் ஒரே ஆண்டில் நிறைவேறாது. பெரும்பாலான திட்டங்கள் உலக வங்கி மூலம் நிறைவேறும் திட்டங்கள், அவர்கள் அனுமதித்த பிறகுதான் நாம் டெண்டர் இறுதி செய்ய முடியும். வேண்டுமென்றே திட்டமிட்டு அரசியலுக்காக இவ்வாறு கூறுகிறார்களே தவிர, எந்த ஊழலும் கிடையாது. திமுக ஆட்சியில்தான் பாக்ஸ் டெண்டர் விட்டனர். அவர்கள் யாருக்கு அனுமதி கொடுக்கிறார்களோ, அவர்கள்தான் பெட்டியில் போட முடியும். அங்குதான் ஊழல்நடக்கும். நாங்கள் வெளியிடுவது இ-டெண்டர். இதில் எங்கிருந்தும் பங்கேற்க முடியும், வெளிப்படையான ஒப்பந்தம் என்பதால் ஊழல் செய்ய முடியாது.
அரசின் பெரிய சாதனையாக நீங்கள் கருதுவது?
சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து, எந்த பின்புலமும் இல்லாமல் வந்த நான் முதல்வரானதும், பெரும்பான்மை நிரூபிக்கும்போதுஎவ்வளவு அராஜகம் செய்தார்கள் என்பது மக்களுக்கு தெரியும். அதையெல்லாம் முறியடித்துதான் முதல்வராக இருக்கிறேன். பிறகு,கட்சியை உடைக்க சதி செய்தனர். திமுகதூண்டுதலின்பேரில், குறிப்பிட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் வெளியில் சென்றனர். பிறகு நடந்த இடைத்தேர்தலிலும் குறிப்பிட்ட தொகுதியில் வெற்றி பெற்றோம். கடும் வறட்சி, புயலைஎதிர்கொண்டு, மக்களுக்கு தேவையான உதவிகளை செய்தோம். தீவிர நடவடிக்கையால் கரோனா பாதிப்பு குறைந்துள்ளது. குடும்ப அட்டைக்கு ரூ.1,000, தைப்பொங்கலுக்காக ரூ.2,500 வழங்கப்பட்டது. இப்படிதுன்பம் வரும்போது, மக்களுக்கு பக்கபலமாக இருந்து வரும் அரசு இது. அதையே சாதனையாக நினைக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago