வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு முதல்வர், துணை முதல்வருக்கு ராமதாஸ் நன்றி

By செய்திப்பிரிவு

வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கிய முதல்வர், துணை முதல்வருக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை:

வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் சட்ட மசோதா, சட்டப்பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதன்மூலம் எனது 40 ஆண்டு போராட்டத்துக்கு முதல் கட்டவெற்றி கிடைத்துள்ளது. இதற்காக முதல்வர் பழனிசாமிக்கு நன்றி.

இந்த நேரத்தில், 1987-ல் தொடர் சாலைமறியல் போராட்டத்தில் காவல்துறையினரின் துப்பாக்கிச்சூடு மற்றும் தாக்குதலில் கொல்லப்பட்ட 21 பேரின் தியாகத்தை போற்றுகிறோம். மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள பிற சமூகத்தினருக்கு 2.5 சதவீதம், சீர்மரபினருக்கு 7 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த தற்காலிக இட ஒதுக்கீட்டு ஏற்பாட்டை வரவேற்கிறேன்.

அடுத்த 6 மாதங்களில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி வன்னியர்களுக்கு மக்கள்தொகைக்கு இணையான இடப்பங்கீடு வழங்குவதற்கு உறுதி அளித்த முதல்வர் பழனிசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தேன்.

வன்னியர்கள் இடப்பங்கீட்டுக்கு துணை நின்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், இதற்காக பல்வேறு வழிகளில் இடைவிடாமல் முயற்சி மேற்கொண்ட சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கும், வன்னியர் சங்கம், பாமக சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.

பாமக தலைவர் ஜி.கே.மணியும் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது இதே கருத்தை தெரிவித்தார்.

கண்ணீர் விட்ட அன்புமணி

வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது குறித்த தகவலை ராமதாஸிடம் அன்புமணி செல்போன் மூலம் தெரிவித்தார்.

அப்போது, ‘‘உங்கள் 40 ஆண்டுகால உழைப்பு முதல்கட்டமாக நிறைவேறியுள்ளது’’ என்று கூறி ஆனந்தக் கண்ணீரை அடக்க முடியாமல் அன்புமணி தேம்பி அழுதார். முகநூல், ட்விட்டர், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்