சத்தீஸ்கரில் தீவிரவாதத் தாக்குதலில் வீரமரணம் அடைந்த மதுரைராணுவ வீரரின் உடல் 21 குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதையுடன் சொந்த ஊரில் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
மதுரை மாவட்டம், அழகர்கோவில் அருகில் உள்ள பொய்கைக்கரைப்பட்டியைச் சேர்ந்த விவசாயி லட்சுமணன். இவருக்கு 3 மகன்கள். இவரது இளைய மகன் பால்சாமி (33). இவரது மனைவி ராமலட்சுமி. இவர்களுக்கு 2 வயதில் சுஜித் என்ற மகள் உள்ளார்.
கடந்த 2008-ல் இந்திய ராணுவத்தில் சேர்ந்த பால்சாமி, 13 ஆண்டுகளாக இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்புப் படைப் பிரிவில் பணிபுரிந்தார். கடந்த பிப்.24-ம் தேதிசத்தீஸ்கர் மாநிலம், நாரணப்பூர் மாவட்டம், சோன்பூர் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, நக்சல் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பால்சாமி வீரமரணம் அடைந்தார். இந்நிலையில் பால்சாமியின் உடல் சொந்த ஊரான பொய்கைக்கரைப் பட்டிக்கு நேற்றுகாலை கொண்டு வரப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் அன்பழகன், காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் உள்ளிட்ட அதிகாரிகள், மூர்த்தி எம்எல்ஏ உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். இதைத் தொடர்ந்து, பிற்பகலில் அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ஊர் மயானத்தில் 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக பால்சாமியின் உடலை காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார், டிஎஸ்பி விஜயகுமார் உள்ளிட்ட காவல்துறையினர் தோளில் சுமந்து சென்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago