சிவகங்கை அருகே அரளிப்பாறையில் நடந்த மஞ்சுவிரட்டில் மாடுகள் முட்டி 4 பேர் உயிரிழப்பு; 94 பேர் காயம்

By செய்திப்பிரிவு

சிங்கம்புணரி அருகே அரளிப்பாறையில் நடந்த மஞ்சுவிரட்டில் மாடுகள் முட்டியதில் 4 பேர் உயிர்இழந்தனர். 94 பேர் காயமடைந்தனர்.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே அரளிப்பாறையில் சிறிய குன்றின்மீது குன்றக்குடி ஆதின மடத்துக்கு உட்பட்ட பாலதண்டாயுதபாணி சுவாமி கோயில்உள்ளது. ஐந்து நிலை நாட்டார்களுக்கு உட்பட்ட இந்த கோயிலில் ஆண்டுதோறும் மாசிமகத்திருவிழாவின் 10-ம் நாளில் மஞ்சுவிரட்டு நடைபெறும்.

முல்லைமங்கலம், சதுர்வேதமங்கலம், கண்ணமங்கலம், சீர்சேர்ந்தமங்கலம், வேழமங்கலம் ஆகிய ஐந்து நிலை நாட்டார்கள் சேர்ந்து 200 ஆண்டுகளுக்கும் மேலாக மஞ்சுவிரட்டை நடத்தி வருகின்றனர்.

இந்த ஆண்டு மாசிமகத் திருவிழாவையொட்டி அரளிப்பாறையில் நேற்று மஞ்சுவிரட்டு நடந்தது. இதையொட்டி மதியம் 1 மணிக்கு கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு, கோயில் காளைகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. பிறகு தொழுவிலிருந்து முதலில் கோயில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. பின்னர் மற்ற காளைகள் திடலில் அவிழ்த்துவிடப்பட்டன.

தொழுவில் இருந்து பதிவு செய்யப்பட்ட 111 மாடுகள் மட்டும் அவிழ்த்துவிடப்பட்டன. காளைகளை அடக்க 66 மாடுபிடி வீரர்கள் களமிறங்கினர். காளைகளைஅடக்கிய வீரர்களுக்கும், அடக்க முடியாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. மலை குன்றின் மீது அமர்ந்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மஞ்சுவிரட்டைபார்த்து ரசித்தனர். இதில் மாவட்டஆட்சியர் மதுசூதன், வட்டாட்சியர் திருநாவுக்கரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர். மஞ்சுவிரட்டைக் காண வந்த வெளியூரைச் சேர்ந்தோருக்கு கிராம மக்கள் விருந்து அளித்து உபசரித்தனர்.

இது தவிர ஆங்காங்கே வயல்வெளிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள் அவிழ்த்துவிடப்பட்டன. இதில் மாடுகள் முட்டியதில் திருப்பத்தூர் புதூரைச் சேர்ந்த சேது(45), ஆத்தங்குடியைச் சேர்ந்தஅஜித்குமார்(26), நாமனூரைச் சேர்ந்த மருது(40), மேல வண்ணாரிருப்பைச் சேர்ந்த மகேஷ் (23)ஆகிய 4 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 94 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

பிரான்மலை வட்டார மருத்துவ அலுவலர் நபிஷாபானு தலைமையிலான மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதில் படுகாயமடைந்த 6 பேர் தீவிர சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்