நிதி மேலாண்மையில் தமிழக அரசுவரலாறு காணாத தோல்வி அடைந்திருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக சமூக ஊடகங்களில் அவர் நேற்று வெளியிட்ட வீடியோவில் பேசியிருப்பதாவது:
தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில் அதிமுக அரசு அவசர கோலத்தில் பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. தமிழக நிர்வாகத்தையும், நிதி நிர்வாகத்தையும் அதிமுக அரசு நிர்மூலமாக்கிவிட்டது. அதிமுக அரசின் இடைக்கால பட்ஜெட் என்பது தமிழக நிதி நிலையின் கவலைக்கிடமான அறிக்கை. தமிழகத்தின் கடன் சுமை ரூ.5 லட்சத்து 70 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது.
திமுக ஆட்சியில் ரூ.438.78 கோடி உபரி வருவாயுடன் பட்ஜெட் அறிக்கையை விட்டுச் சென்றோம். ஆனால், இன்று வருவாய் பற்றாக்குறை ரூ.41,417 கோடி. 2006 முதல் 2011 வரை திமுக ஆட்சியின்போது வாங்கப்பட்ட கடன் ரூ.44,084 கோடி. ஆனால், 2011 முதல் 2021 வரை அதிமுக ஆட்சியில் வாங்கியிருக்கும் கடன் ரூ.4 லட்சத்து 68,648 கோடி. சுதந்திரம் வாங்கியதில் இருந்து 2011 திமுக ஆட்சி வரை மொத்த கடன் ரூ.1 லட்சம் கோடிதான். தற்போது கடன் 500 சதவீதம் அதிகரித்துவிட்டது. இந்த நிமிடம் பிறக்கப் போகும் குழந்தையின் தலையில்கூட ரூ.62 ஆயிரம் கடனைசுமத்தியுள்ளது அதிமுக அரசு.
2015-16 பட்ஜெட்டில் 9 சதவீதம் பொருளாதார வளர்ச்சியை எட்டுவோம் என்று அதிமுக அரசு சொன்னது. இதையே ஒவ்வொரு பட்ஜெட்டிலும் கூறி வருகிறார்கள். ஆனால், ஒரு ஆண்டுகூட இந்த வளர்ச்சியை எட்ட முடியவில்லை.
திமுக ஆட்சியில் 10.9 சதவீதமாக இருந்த தொழில் வளர்ச்சி, அதிமுக ஆட்சியில் 4.6 சதவீதமாக சரிந்துவிட்டது. அதிமுக ஆட்சியில் பெரும்பாலான பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன.
மத்திய அரசு தினமும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகிறது. மத்திய, மாநில அரசுகள் போட்டி போட்டு வரி விதிப்பதால் விலை கூடுகிறது. பெட் ரோல், டீசல் விலை உயர்வதால் விலைவாசி உயர்கிறது. எனவே, இவற்றுக்கு பிரதமர் மோடி மட்டுமல்ல, முதல்வர் பழனிசாமியும்தான் பொறுப்பு.
இடைக்கால பட்ஜெட்டில் முக்கிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. அண்மையில் பிரதமர்தொடங்கி வைத்த 9 கி.மீ. நீளமுள்ள சென்னை மெட்ரோ ரயில்திட்டத்துக்கு நிதி ஒதுக்கவில்லை. பிரதமர் துவக்கி வைத்த கல்லணை கால்வாய் நீட்டித்தல், புனரமைத்தல் மற்றும் நவீனமயமாக்கல் திட்டத்துக்கு நிதி ஒதுக்கவில்லை. ரூ.12 ஆயிரம் கோடி பயிர்க் கடன் தள்ளுபடி என்று முதல்வர் அறிவித்தார். ஆனால், அதற்கு ரூ.5 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்காகவே அறிவிப்புகளை வெளியிடுகிறார், தொடக்கவிழா நடத்துகிறார் என்று குற்றம்சாட்டினேன். அதை இந்த இடைக்கால பட்ஜெட் நிரூபித்துவிட்டது. நிதி மேலாண்மையில் வரலாறுகாணாத தோல்வி அடைந்திருக்கிறார் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.
தேர்தலுக்கு முன்பு பணிகளை மேற்கொண்டு நிறைவேற்ற முடியாது என்று தெரிந்தும், கடந்த 3 மாதங்களில் மட்டும் ரூ.40 ஆயிரம் கோடி மதிப்புள்ள டெண்டர்களை விட்டு அரசு கஜானாவை காலி செய்துள்ளனர். தமிழக வளர்ச்சியை50 ஆண்டு பின்னோக்கி இழுத்துச்சென்றுவிட்டனர். 10 ஆண்டுஅதிமுக ஆட்சியில் உருப்படியான உள்கட்டமைப்பு திட்டம் ஒன்றுகூடநிறைவேற்றப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago