ஓய்வுபெறும் வயது 60 ஆக அதிகரிப்பு அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு

By செய்திப்பிரிவு

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும்வயது 60 ஆக அதிகரிக்கப்பட்டிருப்பதற்கு அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இதுதொடர்பாக ஊழியர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளதாவது:

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் மு.அன்பரசு, பொதுச்செயலாளர் ஆ.செல்வம்: அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 60 ஆக உயர்த்தியிருப்பது, அரசுவேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்களின் எதிர்காலத்தை பெரிதும் பாதிக்கும். அவர்கள் வேலைவாய்ப்பு இல்லாதவர்களாக மாறி, சமூக அநீதி பெருக வழிவகை ஏற்படுத்திவிடும். இதை அரசு உணர வேண்டும். ஓராண்டுக்கு சுமார் 30 ஆயிரம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓய்வுபெறுவதாக கணக்கிட்டால் அவர்களுக்கு ஓய்வூதிய பணப் பயன்களாக அரசு ரூ.6 ஆயிரம் கோடி செலவழிக்க வேண்டி இருக்கும். அந்த தொகைக்காக லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்கால வாழ்க்கையை கேள்விக்குறி ஆக்கக் கூடாது. சமூக நீதிக்கு எதிரான இந்த நடவடிக்கையை அரசு உடனே திரும்பப் பெற வேண்டும்.

தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் பி.கே.இளமாறன்: பல லட்சம் இளைஞர்கள் படித்துவிட்டு அரசு வேலைக்காக காத்திருக்கின்றனர். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காத்திருக்கும் நிலையில், அந்த எதிர்பார்ப்பு ஓராண்டு தள்ளிப்போவதால், இன்னும் பல பிரச்சினைகளை சந்திப்பதோடு மனஉளைச்சலையும் ஏற்படுத்தும். ஓய்வுபெறுவோருக்கு ஓய்வூதிய பணப் பயன்கள் வழங்க வேண்டி உள்ளதால் நிதிநிலையை காரணம் காட்டி ஆண்டுதோறும் அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயதை உயர்த்துவது சரியான தீர்வு ஆகாது. அரசு ஊழியர் ஓய்வு வயது வரம்பை தீர்க்கமாக 60 வயது அல்லது 30 ஆண்டுகள் பணி நிறைவு ஆகிய இரண்டில், எது முதலில் வருகிறதோ அதை எடுத்துக்கொள்ளலாம். இருப்பினும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு கருதி, அரசு ஊழியர் ஓய்வு வயதை 60 ஆக உயர்த்தியதை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

கொமதேக பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன்: ஓய்வுபெறுவோருக்கு ஓய்வூதிய பணப் பயன்கள் வழங்குவதற்கான நிதி பற்றாக்குறை காரணமாகவே ஓய்வு பெறும் வயது 60 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தமிழ் மாநில தலைவர் என்.ரெஜீஸ் குமார், மாநில தலைவர் எஸ்.பாலா: அரசு ஊழியர்ஓய்வு வயது 60 ஆக உயர்த்தப்பட்டிருப்பது, இளைஞர்களுக்கு இழைக்கும் துரோகம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்