சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.
சிவகாசி அருகே உள்ள காளையார்குறிச்சியில் தங்கராஜ் பாண்டியன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று செயல்படுகிறது. இந்த ஆலை நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதி பெற்று இயங்கி வருகிறது.
இங்கு 30-க்கும் மேற்பட்ட அறைகளில் பேன்ஸி ரகப் பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த ஆலையில் வழக்கம்போல் 80-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேற்றும் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஒரு அறையில் பேன்ஸி ரகப் பட்டாசுகளுக்கு மருந்து செலுத்தும்போது உராய்வு ஏற்பட்டு பட்டாசுகள் வெடித்தன. இதனால் அடுத்தடுத்து இருந்த அறைகளுக்கும் தீ பரவி பட்டாசுகள் வெடித்துச் சிதறின.
இந்த விபத்தில் 2 பெண்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 4 கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. மேலும் 13 தொழிலாளர்கள் பலத்த காயமடைந்தனர்.
தகவலறிந்து வந்த விருதுநகர் மற்றும் சிவகாசி தீயணைப்புவீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இறந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. காயமடைந்தவர்களும் சிவகாசி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து எம்.ரெட்டியபட்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago