சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீது பெண் ஐபிஎஸ் அதிகாரி கொடுத்துள்ள பாலியல் புகார் குறித்து விசாரிக்க கூடுதல் தலைமைச் செயலாளர் தலை மையில் 6 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக சட்டம்-ஒழுங்கு சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர், டிஜிபி ஜே.கே.திரிபாதியிடம் புகார் மனு கொடுத்துள்ளார். இதன் மீது நடவடிக்கை எடுக்கும்படி உள்துறை செயலாளருக்கு டிஜிபி திரிபாதி பரிந்துரை கடிதம் அனுப்பினார்.
இதுதொடர்பாக தமிழக அரசின் உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் நேற்று வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:
பெண் ஐபிஎஸ் அதிகாரிக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக வந்த புகாரில் சிறப்பு டிஜிபி குறித்து விசாரணை நடத்த விசாரணை குழு அமைக்கப்படுகிறது. இதில், தமிழக திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை செயலர் மற்றும் கூடுதல் தலைமைச் செயலர் ஜெய ரகுநந்தன் தலைவராகவும் தலைமையிட ஏடிஜிபி சீமா அகர்வால், நிர்வாகப் பிரிவு ஐஜி அருண், காஞ்சிபுரம் டிஐஜி சாமுண்டீஸ்வரி, டிஜிபி அலுவலக தலைமை நிர்வாக அதிகாரி வி.கே.ரமேஷ் பாபு, சர்வதேச நீதிபணியின் லொரேட்டா ஜோனா (சமூக ஆர்வலர்) ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்டவிசாரணைக்குழு அமைக்கப்பட் டுள்ளது.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
“முதல்வரின் சுற்றுப்பயண பாதுகாப்புக்குச் சென்ற சிறப்பு டிஜிபி, பெண் ஐபிஎஸ் அதிகாரிக்குப் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். அந்த அதிகாரியை பணியிடை நீக்கம் செய்து, கிரிமினல் வழக்குத் தொடர வேண்டும். அவரை பாதுகாக்க நினைத்தால் திமுக போராட்டம் நடத்தும்” என அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று மாலை, சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ்தாஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago