முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் பிறந்தநாளையொட்டி அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா, தமிழகம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. பல்வேறு பகுதிகளில் ஜெயலலிதாவின் படத்தை அலங்கரித்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அன்னதானம், மருத்துவ முகாம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.
சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அத்துடன் எம்ஜிஆர் சிலைக்கும் மாலை அணிவித்தனர். கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கி, ஜெயலலிதா பிறந்த நாள் விழா சிறப்பு மலரை வெளியிட்டனர். அதை அவைத் தலைவர் இ.மதுசூதனன் பெற்றுக் கொண்டார்.
அதைத் தொடர்ந்து, எம்ஜிஆர் மன்ற செயலாளர் அ.தமிழ்மகன் உசேன் ஏற்பாடு செய்திருந்த 73 கிலோ கேக்கை ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் இணைந்து வெட்டினர். பல்வேறு காரணங்களால் மரணமடைந்த அதிமுகவினர் 9 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் குடும்ப நலநிதி வழங்கப்பட்டது.
சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஏற்பாடு செய்திருந்த மருத்துவ முகாமை ஒருங்கிணைப்பாளர்கள் இருவரும் தொடங்கி வைத்தனர். இந்த முகாம் நாளை வரை நடக்கிறது. இலக்கிய அணி மற்றும் கட்சி நிர்வாகிகள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அதிமுக துணைஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன் உள்ளிட்ட அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள், தலைமை நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
விழாவுக்கு வந்த ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ், இபிஎஸ் இருவருக்கும் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். மியூசிக் அகாடமி முதல் கட்சி அலுவலகம் வரை சாலையின் இருபுறமும் அதிமுகவினர் திரண்டிருந்தனர். முன்னாள் எம்.பி., ஜெ.ஜெயவர்த்தன், அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், மாவட்டச் செயலாளர்கள் நா.பாலகங்கா, டி.ஜி.வெங்கடேஷ் பாபு, ஆர்.எஸ்.ராஜேஷ், விருகைஎன்.ரவி, பி.சத்தியா, வி.அலெக்சாண்டர், எம்ஜிஆர் இளைஞர் அணி காஞ்சி மாவட்டச் செயலாளர் ஆர்.வி.ரஞ்சித்குமார் உள்ளிட்ட பலரும் விழாவில் பங்கேற்றனர்.
ஜெயலலிதாவின் 73-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, அனைவரும் மாலை 6 மணிக்குவீட்டின் வெளியில் விளக்கேற்றவேண்டுகோள் விடுக்கப்பட் டிருந்தது. அதன்படி, நேற்று அதிமுகவினர் தங்கள் வீடுகளின் வெளியில் விளக்கேற்றினர். முதல்வர் பழனிசாமி கிரீன்வேஸ் சாலையில் உள்ள தன் வீட்டின் முன் விளக்கேற்றினார். துணை முதல்வர் தேனியில் உள்ள தன் வீட்டில் விளக்கேற்றினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago