மத்திய பாஜக அரசை கண்டித்து புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணி ஆர்ப்பாட்டம் திமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்பு

புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு கவிழ்ந்ததையடுத்து, மத்திய பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகளின் சார்பில் புதுச்சேரி அண்ணா சிலை அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். முன்னாள் முதல்வர் நாராயணசாமி, திமுக அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் சலீம், முன்னாள் எம்எல்ஏ நாரா கலைநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரதேசச் செயலாளர் ராஜாங்கம், மாநிலக்குழு உறுப்பினர் பெருமாள், பிரதேசக் குழு உறுப்பினர் முருகன், கூட்டணி கட்சிகள், இயக்கங்களைச் சேர்ந்த தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் நாராயணசாமி பேசியதாவது: புதுச்சேரியில் நடந்தது போல் ஜனநாயக படுகொலையை பல மாநிலங்களில் பாஜக அரங்கேற்றியுள்ளது.

கிரண்பேடியால் எங்களுக்கு தொல்லை கொடுத்தனர். நிம்மதியாக ஆட்சி செய்யவிடவில்லை. அதிகார பலம், பணபலத்தை பயன்படுத்தி காங்கிரஸ் கட்சியில் இருந்த சில துரோகிகள் மூலம் ஆட்சியை கவிழ்த்தனர். ஆனால், புதிதாக ஆட்சி அமைக்க முடியவில்லை.

ஹரியானா மாநிலத்தில் சவுதாலா பேரனின் கட்சியானது 10 இடங்களை வென்றது. அவர்களை இழுத்து பாஜக கூட்டணி ஆட்சி அமைத்தனர். சில காலம் கழித்து சவுதாலா கட்சியைச் சேர்ந்த 9 எம்எல்ஏக்களை தங்கள் கட்சியின் வசப்படுத்தினர். இதே நிலைதான் நாளை ரங்கசாமிக்கும் ஏற்படும். யார், யாரையோ மிரட்டுகிறார்கள். என்னை மிரட்டி பாருங்கள் பார்க்கலாம். கொள்கையும், கோட்பாடும் இல்லாதவர்கள்தான் மிரட்டலுக்கு அடிபணிவார்கள் என்றார்.

தமிழகத்துக்கான ஒத்திகை

ஆர்ப்பாட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் பேசியதாவது: பல மாநிலங்களில் அநாகரிக அரசியலை பாஜகவினர் அரங்கேற்றி வருகின்றனர். எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சி கவிழ்ப்பை செய்துள்ளனர். ஒரு வகையில் காங்கிரஸுக்கு பாஜக நல்லதையே செய்துள்ளது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள்மீண்டும் காங்கிரஸ் - திமுக கூட்டணிக்கு வாக்களிப்பார்கள்.

பாஜகவின் அடாவடி அரசியலுக்கு என்ஆர்.காங்கிரஸ், அதிமுகதுணை போயுள்ளன. அவர்களையும், ராஜினாமா செய்தவர்களையும் வாக்குக் கேட்க வரும்போது வீதிக்குள் நுழையவிடாமல் விரட்டிஅடிக்க வேண்டும். பாஜக விரித்தவலையில் 6 பேர் சிக்கியுள்ளனர். அவர்களுக்கு அரசியல் எதிர்காலமே இல்லாமல் செய்ய வேண்டும்.

புதுவை அரசை கலைத்திருப்பதன் மூலம் தமிழகத்துக்கு ஓரு ‘சிக்னல்’ கொடுத்துள்ளனர். தமிழகத்தில் திமுக அரசு அமைந்தால் அதையும் அசைத்து பார்க்க முடியும் என எச்சரிக்கை விடுக்கும் ஒத்திகையைப் போல இதை பார்க்கிறோம். ஆனால் தமிழகத்தில் பாஜக முயற்சியும் கனவும் பலிக்காது என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE