மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதுச்சேரி காங்கிரஸ் அரசை கவிழ்த்த பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டனம்

By செய்திப்பிரிவு

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதுச்சேரி காங்கிரஸ் அரசை கவிழ்த்த பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர்கள் கூறியிருப்பதாவது:

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்: தமிழகத்துடன் இணைந்து சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள புதுச்சேரியில் ஜனநாயகப் படுகொலையை நடத்தியிருக்கிறது மத்திய பாஜக அரசு. துணைநிலைஆளுநராக இருந்த கிரண் பேடிமூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் - திமுக கூட்டணிஅரசின் உரிமைகளைப் பறித்ததுடன், மக்கள் நலத் திட்டங்கள் அனைத்துக்கும் தடை விதித்தது. தேர்தல் நெருங்கும் நிலையில் கிரண்பேடியை மாற்றிவிட்டு தெலங்கானா ஆளுநர் தமிழிசைசவுந்தரராஜனை கூடுதல் பொறுப்பாக நியமித்தபோதே இதன் உள்நோக்கத்தைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டேன்.

குதிரை பேரம் நடத்தியும், நியமன உறுப்பினர்கள் மூலமும் நாராயணசாமி அரசை பாஜக கவிழ்த்துள்ளது. பாஜகவின் மக்கள் விரோதச் செயல்பாடுகளையும், சட்ட அத்துமீறல்களையும் பேரவையில் எடுத்துரைத்து, தனது முதல்வர் பதவியை நாராயணசாமி ராஜினாமா செய்திருக்கிறார். ஜனநாயகம் காப்பதில் அவருடைய துணிச்சலான செயல்பாட்டை வாழ்த்துகிறேன்.

தமிழகத்தில் ஒரு எம்எல்ஏ கூட இல்லாவிட்டாலும் அதிமுகவை கைப்பாவையாக்கி பாஜக ஆட்சிநடத்துகிறது. அதுபோல புதுச்சேரியில் தேர்தலைத் தள்ளிவைத்து, துணைநிலை ஆளுநர் மூலம்மறைமுக ஆட்சி நடத்த முயற்சித்தால், அதை நீதிமன்றத்தில் சட்டரீதியாக எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளில் திமுக துணை நிற்கும். இந்த ஜனநாயகப் படுகொலையை எதிர்த்து திமுக - காங்கிரஸ் கூட்டணி மக்கள் மன்றம் செல்லும்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அரசை குறுக்கு வழியில் பாஜக கவிழ்த்திருப்பது கடும்கண்டனத்துக்குரியது. புதுச்சேரி போன்ற ஒரு சிறிய மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடப்பதை சகித்துக் கொள்ள முடியாத நிலையைவைத்து, பாஜகவின் சர்வாதிகார அணுகுமுறையை மக்கள் நன்குபுரிந்து கொள்வார்கள். புதுச்சேரிகாங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்ப்பதில் பாஜக தற்காலிகமாக வெற்றிபெறலாம். ஆனால், மக்கள் மனதிலிருந்து காங்கிரஸை அகற்ற முடியாது. ஜனநாயகத்துக்கு விரோதமாகச் செயல்பட்ட பாஜகவுக்கு வரும் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதுச்சேரி காங்கிரஸ் அரசை குறுக்கு வழியில் பாஜக கவிழ்த்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. புதுச்சேரி போன்ற யூனியன் பிரதேச ஆட்சி, உள்துறை அமைச்சகத்தின்கீழ் இயங்க வேண்டிய நிலையே நீடிப்பது ஒரு அரசியல் முரண்நகை. புதுச்சேரி மாநிலத்துக்குத் தனி மாநிலத் தகுதி இல்லாததே இதுபோன்ற பிரச்சினைகளுக்கு காரணம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை துணை நிலை ஆளுநரைப் பயன்படுத்தி கடந்த நான்கரை ஆண்டுகளாக முடக்கம் செய்து மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்ற முடியாத நிலைமையை மத்திய பாஜக அரசு ஏற்படுத்தி வந்தது. ஆட்சி முடிவுறும் நிலையில் காங்கிரஸ் ஆட்சியை பாஜக கவிழ்த்துள்ளது. இது கடும் கண்டனத்துக்குரியது.

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் நாராயணசாமி தலைமையிலான புதுச்சேரி காங்கிரஸ் அரசை பெரும்பான்மை இழக்கச் செய்து ஆட்சியை அகற்றியிருப்பது தேர்தல் ஜனநாயகத்தைப் படுகொலை செய்வதற்கு சமமாகவே கருதுகிறேன்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன்: அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், கோவா, மேகாலயா, கர்நாடகம், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில், ஆட்சி கவிழ்ப்பு செய்து குறுக்கு வழியில் தனது ஆட்சியை நிறுவியுள்ள பாஜக அரசு, தற்போது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதுச்சேரி அரசைகவிழ்த்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. வரும் தேர்தல்களில் தமிழகத்திலும், புதுச்சேரியிலும் பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்