தஞ்சாவூரில் உள்ள நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் கல்லூரியில், மறைந்த தமிழறிஞர் பி.விருத்தாசலனாருக்கு, அவரிடம் கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து, ரூ.12 லட்சம் செலவில் முழு உருவ வெண்கலச் சிலையை நேற்று முன்தினம் திறந்துள்ளனர்.
தமிழவேள் உமா மகேசுவரனார் கரந்தை கலைக் கல்லூரியின் முன்னாள் தமிழ்த் துறை பேராசிரியரும், முதல்வரும், நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருட் கல்லூரி நிறுவனரும், சென்னை பல்கலைக்கழகத்தின் இலட்சினையில் ‘கற்றனைத்தூறும் அறிவும் ஆற்றலும்’ என்ற தமிழ்த்தொடரை இடம்பெறச் செய்தவரும், சென்னை பல்கலைக்கழகம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆட்சிக்குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்களில் 30 ஆண்டு காலம் தமிழ்மொழி வளர்ச்சிக்கும், மாணவர் நலனுக்கும் பாடுபட்டு, தமிழுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவருமான தமிழறிஞர் பேராசிரியர் பி.விருத்தாசலனாரின் நினைவைப் போற்றும் வகையில், அவரிடம் பயின்ற முன்னாள் மாணவர்கள் சார்பில் இந்தச் சிலை திறக்கப்பட்டுள்ளது.
இவ்விழாவில், பூண்டி புஷ்பம் கல்லூரி தாளாளர் துளசி ஐயா வாண்டையார், முன்னாள் மத்தியஅமைச்சரும், தஞ்சாவூர் தொகுதிஎம்.பி-யுமான எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், பழநி ஆதினம் சாது சண்முக அடிகளார், முன்னாள் அமைச்சர் உபயதுல்லா உள்ளிட்டோர் கலந்துகொண்டு, சிலையை திறந்துவைத்தனர்.
இந்நிகழ்ச்சியில், முன்னாள் மாணவர்கள், தமிழார்வலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago