``நாட்டிலேயே பெண்கள் பாதுகாப்பாக வாழும் மாநிலம் தமிழகம்" என்று திருநெல்வேலி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தின்போது தமிழக முதல்வர் பழனிசாமி குறிப்பிட்டார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் வள்ளியூர், களக்காடு, மேலச் செவல் பகுதிகளில் முதல்வர் பேசியதாவது:
தமிழகத்தில் 30 ஆண்டுகளாக நடைபெற்ற அதிமுக ஆட்சி காலத்தில் எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி நாட்டிலேயே முதல் மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. ஏராளமான விருதுகளையும் பெற்றுள்ளது. அதிக எண்ணிக்கையில் கல்லூரிகளை திறந்து அதன் மூலம் உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாட்டிலேயே உயர் கல்வி கற்பவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில்தான் அதிகம்.
நாட்டிலேயே பெண்கள் பாதுகாப்பாக வாழும் மாநிலமாக தமிழகம் சிறந்து விளங்குகிறது. 2.94 லட்சம் மகளிருக்கு மானிய விலையில் இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது. சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது. இதற்காக கடந்த 3 ஆண்டுகளாக விருதுகளைப் பெற்று வருகிறோம்.
ஆனால், அதிமுக அரசு எதுவுமே செய்யவில்லை என்று, திமுக தலைவர் ஸ்டாலின் திட்டமிட்டு பொய்யைப் பரப்பி வருகிறார். நிலமற்றவர்களுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்குவதாக திமுக தலைவராக இருந்த கருணாநிதி வாக்குறுதி அளித்தார். அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதா? திமுகவைக் கண்டாலே மக்களுக்கு அலர்ஜி ஏற்பட்டுள்ளது. நாட்டு மக்களை பார்க்காமல், அவர்களது வீட்டு மக்களை முன்னேற்ற செயல்பட்டனர்.
தமிழகம் முழுவதும் கருணாநிதியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள். கடந்த மக்களவைத் தேர்தலின்போது பொதுமக்களிடம், ஸ்டாலின் வாங்கிய மனுக்கள் எங்கே போனது?
சிறுபான்மையினர் மீது அதிமுகஅரசு அக்கறையுடன் செயல்படுகிறது. கிறிஸ்தவர்கள் ஜெருசலேமுக்கு புனிதப் பயணம் செல்ல ரூ.20 ஆயிரம் வழங்கி வந்ததை ரூ.37 ஆயிரமாக உயர்த்தி வழங்குகிறோம். கிறிஸ்தவ தேவாலயங்களைப் புதுப்பிக்க வழங்கப்பட்ட நிதியை ரூ.1 கோடியில் இருந்து ரூ.5 கோடியாக உயர்த்தியிருக்கிறோம். ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்ள 500 பேருக்கு வழங்கப்பட்ட நிதியுதவி 600 பேருக்கு என்று உயர்த்தப்பட்டது. இனி 1,000 பேருக்கு நிதியுதவி வழங்கப்படும்.
திமுகவினரின் பொய் பிரச்சாரத்தை அதிமுக ஐ.டி பிரிவினர் முறியடிக்க வேண்டும். இளைஞர், இளம்பெண்கள் பாசறையைச் சேர்ந்தவர்கள் வீடுவீடாகச் சென்று அரசின் சாதனைகளையும், திமுகவின் பொய் பிரச்சாரத்தையும் எடுத்துக் கூற வேண்டும் என்றார்.
இதில், வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மாநில ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி, திருநெல்வேலி மாவட்டச் செயலாளர் தச்சை கணேசராஜா, சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஐ.எஸ்.இன்பதுரை, நாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago