பயிர்க் கடனை தள்ளுபடி செய்தாலும் விவசாயிகள் எப்போதும் கடனாளியாகவே இருப்பர் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே முடிக்கரை வீரகாளியம்மன் கோயிலில் அவர்நேற்று குல தெய்வ வழிபாடு செய்தார். அவரது மகனின் காதணி விழாவும் நடந்தது. இதில் 108 கிடா வெட்டி விருந்து அளிக்கப்பட்டது. பின்னர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பயிர்க் கடனை தள்ளுபடி செய்தாலும் விவசாயி கடனாளியாகவே தொடர்வான். அடிப்படையில் உள்ள பிரச்சினையைத் தீர்க்க வேண்டும். உழவன் உற்பத்தி செய்த பொருளுக்கு, அவரேவிலை நிர்ணயிக்க வேண்டும்.
பிரதமர் மோடி அறிவித்த திட்டங்கள் அனைத்தும் வெறும் வெற்று அறிவிப்புதான். மதுரையில் ரூ.2 ஆயிரம் கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. 2 ஆண்டுகள் ஆகியும் இதுவரை மத்திய அரசு ஒதுக்கிய நிதி எவ்வளவு? இதேபோன்றுதான் ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையும் வெற்று அறிவிப்பாகத்தான் உள்ளது.
அதிமுக ஆட்சியில் தமிழகம் வெற்றி நடை போடாது. நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால்தான் வெற்றி நடைபோடும். இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago