விவசாயிகளுக்கு இனி 24 மணி நேரமும் தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்றுமுதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் அவர் பேசியதாவது:
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது முதற்கொண்டு அதிமுக கோட்டையாக உடுமலை தொகுதி இருந்து வருகிறது. இந்த அரசு குறித்து, செல்லும் இடம் எல்லாம் திமுக தலைவர் ஸ்டாலின் அவதூறு கூறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். குடிமராமத்து திட்டம் ஏட்டளவில் இருப்பதாக கனிமொழி பேசுவது முற்றிலும் பொய். தமிழகத்தில் குடிமராமத்து திட்டத்துக்காக ரூ.1,418 கோடி ஒதுக்கப்பட்டு 28,633 குளம், குட்டைகள் தூர்வாரப்பட்டுள்ளன என்பதை அவர் தெரிந்துகொள்ள வேண்டும்.
வேளாண் சிறந்தால்தான் நாடு முன்னேறும் என்பதை இந்த அரசு உணர்ந்திருப்பதால்தான் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. விவசாயிகளின் நலனுக்காக இனி விவசாய மின் இணைப்புக்கு 24 மணி நேரமும் தடையில்லா மும்முனை மின்சாரம் விநியோகிக்கப்படும்.
தாழ்த்தப்பட்ட மக்கள் உட்பட வீடு இல்லாத அனைவருக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும். இந்த ஆட்சியை அடிமை ஆட்சி என்று ஸ்டாலின் கூறி வருகிறார். 15 ஆண்டுகளாக காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகித்து திமுக சாதித்தது என்ன? குடும்ப உறுப்பினர்களின் நலனுக்காகத்தான் கூட்டணி ஆட்சியில் இருந்தார்கள். மத்தியில் பாஜகவோடு இணக்கமாக இருந்தாலும், தமிழக மக்களின் நலனுக்கு எதிரான எந்த விஷயத்திலும் சமரசம் செய்வது கிடையாது. நல்லது நடந்தால் பாராட்டுகிறோம்.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதுதான், 2010-ம்ஆண்டு நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது. அப்போது, அவர்களுடன்கூட்டணியில் இருந்த திமுக எதிர்க்கவில்லை. தொடக்கத்திலிருந்து நீட் தேர்வை எதிர்த்து வருவதுஅதிமுகதான். உள் ஒதுக்கீடு மூலமாக அதிகமான மருத்துவ மாணவர்களை உருவாக்கியுள்ளதும் இந்த அரசுதான். இவ்வாறு முதல்வர் பேசினார்.
இதில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், முன்னாள் எம்பி சி.மகேந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
பின்னர் பல்லடத்தில் நடந்த பிரச்சாரத்தில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது: ஆட்சியை பிடிக்க கருணாநிதியின் கூட்டுக்குடும்பம் கோரப் பசியில் உள்ளது. ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி, தயாநிதி என குடும்பத்தினர் மட்டும்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். கட்சியில் வேறு யாரும் இல்லையா? திமுகவுக்காக உழைத்த பலர் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை. குடும்பத்திடம் ஆட்சி, அதிகாரம் இருக்க வேண்டும் என்பதற்காக பிரச்சாரத்துக்கு புறப்பட்டுள்ளனர். சாதாரண கிளைச் செயலாளராக தொடங்கி, இன்றைக்கு கட்சியில் இணை ஒருங்கிணைப்பாளராக உள்ளேன். தொண்டன் ஆட்சி புரியும் ஒரே மாநிலம் தமிழகம். ஸ்டாலினுக்கு பின்புலம் கருணாநிதி; எங்களுக்கு மக்கள்தான் பின்புலம் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago