காரைக்காலில் ரூ.2,000 கோடியில் ‘மெடி சிட்டி’ அமைக்க நடவடிக்கை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தகவல்

By செய்திப்பிரிவு

காரைக்காலில் புதிதாக அமைக்கப்பட்டு, அண்மையில் திறக்கப்பட்ட மேற்கு புறவழிச்சாலைக்கு, ‘டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி சாலை’ என பெயர் சூட்டப்பட்டுள்ள நிலையில், அதற்கான பெயர் பலகை திறப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பங்கேற்று, பெயர் பலகையை திறந்துவைத்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அலோபதி, சித்தா, ஹோமியோபதி, ஆயுர்வேதா, யுனானி மருத்துவம், யோகா, இயற்கை வைத்தியம், மூலிகை செடிகள் வளர்ப்பு ஆகியவற்றை உள்ளடக்கி, மிகப்பெரிய அளவில் ரூ.2 ஆயிரம் கோடி செலவில் ‘மெடி சிட்டி’ என்ற திட்டத்தை காரைக்காலுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிங்கப்பூர், துபாய், அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் இணைந்து, இத்திட்டத்தை செயல்படுத்த இசைந்துள்ளன. இதன் மூலம் 10 ஆயிரம் பேருக்கு மேல் வேலைவாய்ப்பு கிடைக்கும்.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்பது காங்கிரஸ் கட்சியின் கொள்கை. சட்டப்பேரவையில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் என்.ரங்கசாமி 5 ஆண்டுகளாக இதுகுறித்து எதுவும் பேசாமல், தேர்தல் வரும்போது பேசுவதிலிருந்து, அவரது உள்நோக்கத்தை அறியலாம் என்றார்.

சர்வாதிகார ஆட்சி

முன்னதாக, திருவாரூரை அடுத்த தியானபுரம் பகுதியில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்வில் பங்கேற்ற புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மத்திய பாஜக அரசு சர்வாதிகாரமாக செயல்படுகிறது. புதுச்சேரி மாநிலத்தில் மதவாத சக்திகள் வேரூன்றக் கூடாது என்பதற்காகவே காங்கிரஸும், திமுகவும் இணைந்து பணியாற்றி வருகிறோம். தேர்தல் கூட்டணி குறித்து சோனியா காந்தி, ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் முடிவு செய்வார்கள் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்