திருநெல்வேலியில் தச்சநல்லூர் காவல் நிலையம் முன்பு நாட்டு வெடிகுண்டுகளை வீசிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
தச்சநல்லூர் அருகே உள்ள சத்திரம் புதுக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ண பிரான்(50). தேவேந்திரகுல வேளாளர் எழுச்சி இயக்க தலைவரான இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இதில் ஒரு வழக்கில் நிபந்தனை ஜாமீனில் வந்த இவர், தச்சநல்லூர் காவல் நிலையத்தில் கடந்த சில நாட்களாக கையெழுத்திட்டு வருகிறார்.
நேற்று காலையில் தனது ஆதரவாளர்கள் சிலருடன் கையெழுத்திட காரில் சென்றுள்ளார். காரில் இருந்து இறங்கி காவல் நிலையத்துக்குள் செல்ல முயன்றபோது, அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் சிலர் திடீரென நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளனர். இதில் 2 குண்டுகள் காவல் நிலையம் முன்பு விழுந்து வெடித்தன. அதிர்ஷ்டவசமாக கண்ணபிரானும், அவரது ஆதரவாளர்களும் காயங்களின்றி தப்பினர்.
சத்தம் கேட்டு காவல் நிலையத்தில் இருந்து ஓடி வந்த போலீஸார்குண்டு வீச்சில் ஈடுபட்டவர்களை துரத்தினர். ஆனால், அதற்குள் அவர்கள் இருசக்கர வாகனங்களில் தப்பிச் சென்றுவிட்டனர். அப்போது ஒரு குண்டு சாலையில் விழுந்து வெடித்துள்ளது. மற்றொரு குண்டு வெடிக்காமல் கிடந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் வெடிகுண்டு தடுப்புப்பிரிவு காவல் ஆய்வாளர் பால்ராஜ் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்துக்குவந்து வெடிகுண்டு சிதறல்களை சேகரித்ததுடன், வெடிக்காமல் கிடந்த குண்டையும் கைப்பற்றி செயலிழக்கச் செய்தனர்.
வெடித்த குண்டுகளில் கருங்கல் துகள்கள், சிறிய இரும்புகுண்டுகள் இருந்தது தெரியவந்தது. குண்டு வீச்சில் ஈடுபட்ட நபர்களை கண்டறிய அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
நகரின் அனைத்து இடங்களிலும் போலீஸார் உஷார்படுத்தப்பட்டு, வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago