அலுவலக பணியாளர்களுக்கு முதுகலை ஆசிரியர் பதவி ஆசிரியர் முன்னேற்ற பேரவை கண்டனம்

By செய்திப்பிரிவு

பள்ளி அலுவலக பணியாளர்களுக்கு முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு வழங்குவதற்கான கலந்தாய்வு நடத்தப்பட்டதற்கு, தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் முன்னேற்ற பேரவை கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் முன்னேற்ற பேரவைமாநிலத் தலைவர் பா.ஆரோக்கிய தாஸ், திருப்பூரில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களின் கல்வி நலன் கருதி, கல்விப் பணிக்கு சம்பந்தமில்லாத பள்ளிக் கல்வித் துறை அமைச்சுப் பணியாளர்களுக்கு போட்டித் தேர்வின்றி முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வை, பள்ளிக் கல்வித் துறை உயர் அதிகாரிகள் நடத்தி வருகின்றனர். இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை தமிழக முதல்வரும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும் அறிவித்து வருகிறார்கள்.

ஆனால், ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை ஆட்சியாளர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரியப்படுத்துவதில்லை. இதனால், ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. அதற்கு உதாரணமாக இன்றைக்கு அலுவலக பணியாளர்களுக்கு போட்டித் தேர்வு இல்லாமல், நேரடியாக முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்குகின்றனர்.

தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு, முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு பெற போட்டித் தேர்வு அவசியம் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. ஆனால், இடைநிலை ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்காமல், அலுவலகப் பணியாளர்களுக்கு வழங்குவதை வன்மையாக கண்டிக்கிறோம்.

எனவே, அலுவலக பணியாளர்களுக்கு 2 சதவீதம் பதவி உயர்வு வழங்குவதை நிறுத்திவைக்க வேண்டும். தகுதி வாய்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு, முதுகலை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்