திமுக தலைவர் ஸ்டாலின் விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறி வந்தார். அதைத் தொடர்ந்தே தமிழக அரசு தற்போது விவசாயக் கடனை தள்ளுபடி செய்துள்ளதாக திமுகஇளைஞரணி செயலாளர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேர்தல் சுற்றுப்பயணம் செய்துவரும் உதயநிதி நேற்று உளுந்தூர் பேட்டை தொகுதிக்குட்பட்ட பெரியசெவலை, எலவனாசூர்கோட்டை, உளுந்தூர்பேட்டை, சேந்தநாடு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது உதயநிதி பேசியது: திமுக ஆட்சியின்போது மக்கள் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டன. நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. மாநில உரிமைகள் பாதுகாக்கப்பட்டன. ஆனால், தற்போதைய அதிமுகஆட்சியில் மாநில உரிமைகள் ஒவ்வொன்றாக பறிபோய் கொண்டிருக்கிறது. கரோனா பொது முடக்க காலத்தில், ‘மக்கள் கஷ்டப்படுகிறார்கள், ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்’ என ஸ்டாலின் கூறியிருந்தார். உடனே செய்துவிட்டால் எதிர்க்கட்சித் தலைவருக்கு பெயர் கிடைத்து விடும் என எண்ணி, காலம் தாழ்த்தி, தற்போது தேர்தல் நேரத்தில் ரூ.2,500 வழங்கியுள்ளனர்.
அதேபோன்றுதான் தற்போதும் விவசாயக் கடனில் செய்துள்ளனர். கடந்த 10 தினங்களுக்கு முன், ‘விவசாயிகள் மீளாத் துயரில் இருப்பதால், அவர்களது கடனை ரத்து செய்ய வேண்டும் என கூறியிருந்ததோடு, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும்’ என்று ஸ்டாலின் கூறியிருந்தார். தற்போது அரசு விவசாயக் கடனை தள்ளுபடி செய்துள்ளது. ஸ்டாலின் கூறிய பின்னர்தான் அரசு விழித்துக் கொண்டு செயல்படுகிறது என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago